Friday 6 April 2012

குமரி மாவட்டம் முட்டத்தில் மீண்டும் பதற்றம்

முட்டத்தில் படகுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 64 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர். அவற்றை செயலிழக்க செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஒரு குண்டு வெடித்து சிதறியதில் எஸ்.ஐ. படுகாயமடைந்தார்.
குமரி மாவட்டம் முட்டம் கடற்கரை கிராமத்தில் கடந்த ஆண்டு நடந்த பங்கு பேரவை தேர்தலில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. முன்விரோதம் காரணமாக இரு கோஷ்டிகளும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். வெளியூர்களில் தங்கி மீன்பிடிக்கும் மீனவர்கள், பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு திரும்புவார்கள். அப்போது அவர்களிடையே மோதல் வெடிக்கும்.
நாளை மறுநாள் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் தங்கியிருந்த முட்டம் மீனவர்கள் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அதையும் மீறி நேற்று முன்தினம் பொன்னன்தோப்பு பகுதியில் இரு தரப்பினர் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. ஒருவர் தாக்கப்பட்டார். இது தொடர்பாக 21 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று மாலை முட்டம் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த பழுதடைந்த படகு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறின. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். இதைத் தொடர்ந்து நெல்லை டிஐஜி வரதராஜு, எஸ்பி பிரவேஷ் குமார் தலைமையில் போலீசார் முட்டம் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளில் சோதனை நடத்தினர். அப்போது 3 பைபர் படகுகளில் 64 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவற்றை கைப்பற்றினர்.
அவற்றை செயலிழக்க செய்யும் பணியில் குளச்சல் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் மனோகரன், வெடிகுண்டு செயலிழப்பு பயிற்சி பெற்ற எஸ்.ஐ. முருகேசன் உள்ளிட்டோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது எஸ்.ஐ. முருகேசன் கையில் இருந்த ஒரு குண்டு திடீரென வெடித்துச் சிதறியது. படுகாயமடைந்த அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். படகுகளில் இருந்து வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment