Monday, 9 January 2012

சவுதி அரேபியாவில் இறந்த குமரி மீனவர் உடலை கொண்டுவர நடவடிக்கை

பள்ளம் அன்னை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சகாய ஆன்ட்றின்(32). மீனவர். இவருக்கு ஜோன்ஸ் பென்சா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். தற்போது பென்சா 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். சகாய ஆன்ட்றின் சவுதி அரேபியாவில் தங்கி மீன்பிடித்தொழில் செய்து வந்தார். கடந்த 7ம் தேதி மீன்பிடித்துக்கொண்டிருந்த போது ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ஆன்ட்றின் இறந்தார்.
அவரது உடல் தற்போது சவுதி அரேபியாவில் மருத்துவமனையில் உள்ளது. அவரது உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறவினர்கள் ஹெலன்டேவிட்சன் எம்பியிடம் மனு அளித்தனர்.
இதையடுத்து ஹெலன்டேவிட்சன் எம்பி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வயலார்ரவி மற்றும் சவுதி அரேபியாவுக்கான இந்திய தூதர் பைஸ் அகமது ஆகியோரை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

“கட்டிங்” வெட்டினால் அரைமணியில் கிடைக்கும் : பிறப்பு & இறப்பு சான்றிதழ்

நாகர்கோவில் நகராட்சியில் அலைக்கழிக்கும் அதிகாரிகள்.
நாகர்கோவில் நகராட்சியில் பிறப்பு & இறப்பு சான்றிதழுக்கு 20 நாட்களுக்கு மேல் அதிகாரிகள் இழுத்தடிப்பதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
நாகர்கோவில் நகராட்சியில் பிறப்பு இறப்புகளை பதிவு செய்ய கிருஷ்ணன்கோயில், அண்ணா பஸ்நிலையம், வடசேரி பஸ்நிலையம், கோட்டார் கழுதை சந்தை, மயில்வாகனம் சோப் கம்பெனி தெரு, வட்டவிளை, கணபதி நகர், குருசடி, வாட்டர் டேங்க் ரோடு ஆகிய 14 இடங்களில் டிவிசன் அலுவலகங்கள் உள்ளன.
இந்த அலுவலகங்கள் மூலம் மருத்துவமனைகளில் நிகழும் பிறப்பு, இறப்புகள் நகராட்சி ஆவணங்களில் பதியப்படுகின்றன. இந்த சான்றுகளை நகராட்சி அலுவலகத்தில் உள்ள சேவை மையத்தில் அரசு வேலை நாட்களில் காலை 10 &1, மதியம் 2 & 430 மணிவரை கட்டணம் செலுத்தி 3 நாட்களில் பெறலாம். இதற்காக விண்ணப்படிவம் ரூ. 2 வசூலிக்கப்படும். பின்னர் அதில் ரூ.2க்கான நீதிமன்ற வில்லை ஒட்டி ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.15 வீதம் செலுத்த வேண்டும்.
ஆனால் தற்போது நீதிமன்ற வில்லை ஒட்டிய விண்ணப்படிவத்திற்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. விண்ணப்பப் படிவங்களுக்கான பணத்தை செலுத்திய பின்னர் ஒரு வாரம் கழித்து வருமாறு அங்குள்ள ஊழியர்கள் கூறுகின்றனர். ஆனால் ஒரு வாரம் கழித்த பின்னர் அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே சான்று கிடைக்கும். சான்றிதழ் கிடைக்க குறைந்தது 20 நாட்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் சேவை மையத்தில் இன்று சான்று வரவில்லை. நாளை வாருங்கள் என தொடர்ந்து அலைக்கழிக்கின்றனர்.
இதனால் அவசர காரியங்களுக்கோ அல்லது வெளியூர் வாசிகள் என்றாலோ அடையும் அவஸ்தைக்கு அளவில்லை. இதனால் கவலை தோய்ந்த முகங்களுடன் நிற்பவர்களை குறிவைக்கும் ஊழியர்கள் அவர்களிடம் சான்றிதழ் உடன் வாங்கித்தர சற்று செலவாகும் எனக்கூறி தகுதிக்கேற்ப பல நூறுகளை பெற்றுக்கொண்டு அரை மணி நேரத்தில் சான்றிதழ்களை சம்மந்தப்பட்டவர்களின் கைகளில் தருகின்றனர்.
எனவே நகராட்சி உடனடியாக சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக்கோரிக்கை எழுந்துள்ளது.
இதுபற்றி நகராட்சி நகர்நல அலுவலர் (பொறுப்பு) தாணுப்பிள்ளை கூறியதாவது:
3 நாட்களில் பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்கப்படும். எனினும் 16 பேர் பணியாற்றிய இடத்தில் தற்போது 5 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் சில நேரங்களில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம். விண்ணப்ப படிவத்திற்கு கட்டணமாக ரூ.2 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ரூ.10 வசூலிக்கப்படவில்லை. கூடுதலாக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்களுக்கு ஓய்வூதியம் : மன்மோகன் சிங்

வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இந்திய தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.
வெளிநாட்டு இந்தியர்களின் 10வது மாநாடு ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று தொடங்கியது. இதில், 60 வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர், வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்கள் 1,900 பேர் கலந்து கொள்கின்றனர். மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று பேசியதாவது:
வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் இந்திய தொழிலாளர்கள், தங்களுக்கு அரசு ஏதாவது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களது கோரிக்கை ஏற்று, ஓய்வூதியம் மற்றும் இன்சூரன்ஸ் திட்டம் கொண்டுவரப்படுகிறது. இதன்மூலம் 50 லட்சம் பேர் பயன்பெறுவார்கள். இந்த திட்டத்தின் கீழ் வெளிநாடுகளை சேர்ந்த இந்திய தொழிலாளர்களிடையே தங்கள் வருங்காலத்துக்காக சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த முடியும்.
இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சந்தாதாரர் சார்பிலும் அரசு ஆண்டுக்கு ரூ 1000 செலுத்தும். அதே நேரத்தில், சந்தாதாரர்கள் ஒவ்வொருவரும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். பெண்களுக்கு அரசு தனது பங்காக ரூ 2 ஆயிரம் செலுத்தும்.
வளைகுடா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் அரசியல் நிலையற்ற தன்மை நிலவுகிறது. குறிப்பாக எகிப்து, லிபியாவில் புரட்சி ஏற்பட்டுள்ளது. லிபியாவில் சிக்கிக் கொண்ட 16 ஆயிரம் இந்தியர்களை அவசரமாக வெளியேற்றும் பணியை இந்தியா மேற்கொண்டது. இதுபோன்ற அபாய காலங்களில் உதவ இந்தியா தயாராக இருக்கிறது. இதுபோன்ற காலங்களில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சம்பந்தப்பட்ட நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மன்மோகன் சிங் பேசினார்.

குலசேகரம் அரசு மருத்துவமனையின் அவலம் : பாம்புகள் படையெடுப்பு; நோயாளிகளே காயத்துக்கு கட்டு போடுகின்றனர்

குலசேகரத்தை சுற்றியுள்ள ஏராள மான மலை கிராமங்களில் வாழும் மலைவாழ் மக்க ளின் உயிர்நாடியாக இருப் பது குலசேகரம் அரசு மருத்துவமனை. இதனை நம்பி நூற்றுக்கணக்கான நோயாளிகள் வருகின்றனர். இந்த மருத்துவமனையை தாலுகா மருத்துவமனை யாக தரம் உயர்த்த வேண்டுமென்று பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர்.
முதல்படம் மருத்துவமனை நுழைவு வாயில்
தாலுகா மருத்துவமனைக்குரிய அனைத்து வசதிகளும் இங்குள்ளது. ஆனால் நிர்வாக சீர்கேடுகளால் இம்மருத்துவமனை கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இங்கு 5 மருத்துவர்கள், 5 நர்ஸ், ஒரு துப்புரவு பணியாளர் உள்ளனர். இதில் ஒரே நாள் இரண்டு மருத்துவர், 2 நர்ஸ் பணியில் இருப்பது அபூர்வமாக உள்ளது. துப்புரவு பணியாளர்கள் போதிய அளவு இல்லாததால் துப்புரவு பணிகள் சரியாக நடைபெறுவதில்லை.
நர்ஸ்கள் குறைவாக இருப்பதால் காயங்களுடன் வரும் நோயாளிகள் தாங்களே கட்டு போடவேண்டிய நிலையுள்ளது. உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் பெட்சீட், தலையணை போன்றவை கிழிந்து கந்தையானதாகவும், சலவை செய்யப்படாமலும் வழங்கப்படுகிறது. இதனால் எளிதில் நோய் கிருமிகள் தொற்றி கொள்ளும் நிலையுள்ளது. ஆம்புலன்ஸ் வசதி உள்ளது என்று போர்டு மட்டும் தொங்குகிறது. ஆம்புலன்ஸ் நிறுத்துமிடமும் பல ஆண்டுகளாக காலியாக உள்ளது. ஜெனரேட்டர் வசதியுள்ளது. டீசல் பற்றாக்குறையினால் அது இயக்கப்படுவதில்லை.
திருவட்டார், குலசேகரம் காவல்நிலைய எல்கைகுட்பட்ட பகுதிகளில் அடி, தடியினால் காயம்படுபவர்கள் இங்கு சிகிச்சைக்கு அனுப்பப்படுகின்றனர். மருத்துவமனையில் காவலர்கள் இல்லாததால் மருத்துவமனைக்குள் புகுந்து பழிவாங்கும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெறுகிறது. வெளிநோயாளிகள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள கழிவறைகளை சுற்றிலும் புதர் வளர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது. இதேபோன்று மருத்துவமனை கட்டிடங்களை தவிர பிற பகுதிகள் முழுவதிலும் புதர் வளர்ந்து காணப்படுகிறது.
மருத்துவமனை பணியாளர்கள், மருத்துவர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வராததால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். இருக்கும் பணியாளர்கள் அடிக்கடி விடுமுறையில் சென்று விடுவதால் நோயாளிகள் திண்டாடி வருகின்றனர். மருத்துவமனை புனரமைப்பு பணிகள் மற்றும் புதிய கட்டிட வசதிகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ 52 லட்சம் நிதி பயன்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளதால் அந்த நிதி திரும்ப எடுத்து கொள்ளும் நிலையுள்ளது.
பயன்படுத்த முடியாத நிலையில் பூட்டப்பட்டு உள்ள கழிவறை.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடைபெற வேண்டிய நோயாளிகள் நலசங்க கூட்டம் நடைபெறாமல் உள்ளது. மருத்துவமனை சாலை வழியாக செல்ல வேண்டிய மினி பஸ்கள் அந்த வழியாக செல்வதில்லை. இதனால் நோயாளிகள் பஸ் நிறுத்தத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர்தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலையுள்ளது.
இவ்வாறு எல்லா வசதிகளுடன் தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட வேண்டிய குலசேகரம் அரசு மருத்துவமனை நிர்வாக சீர்கேடுகளால் சீரழிந்து வருகிறது.
நோயாளிகள் அவதி : இரவில் மருத்துவர்கள் இருப்பதில்லை
இது குறித்து நோயாளிகள் நல சங்கத்தை சேர்ந்த மணி கூறுகையில், ஏராளமான நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற வருகின்றனர். நோயாளிகள் வருகைகேற்ற மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை. இரவு நேரத்தில் மருத்துவர்கள் எவரும் பணியில் இருப்பதில்லை. இதனால் முழுநேர மருத்துவர்கள் நியமிக்கவேண்டும். உள்நோயாளிகளாக இருப்பவர்களுக்கு தரமான உணவு மற்றும் சுகாதாரமான போர்வைகள் வழங்க வேண்டும். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பு
குலசேகரம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கூடம் உள்ளது. ஆனால் அறுவை சிகிச்சைக்குரிய மருத்துவர்கள் இல்லாததால் அறுவை சிகிச்சைக்காக நோயாளிகள் காத்திருக்க வேண்டும். அல்லது பிற மருத்துவமனைகளை நாடி செல்லவேண்டும். தற்போது குடும்பகட்டுப்பாடு மற்றும் சில நோய்களுக்கான அறுவை சிகிச்சைக்காக பலர் காத்திருக்கின்றனர். மயக்க மருத்துவர் இல்லாததால் அறுவை சிகிச்சை நடைபெறாமல் பல நாட்களாக காத்திருக்கின்றனர்.
புதர் மண்டியுள்ளது
மருத்துவமனை வளாகத்தில் சூழ்ந்துள்ள புதர்கள்.
மருத்துவமனை வளாகம் புதர் மண்டி கிடப்பதால் அவ்வப்போது நச்சு பாம்புகள் மற்றும் விஷ ஜந்துகள் போன்றவை தலைகாட்டி செல்கிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலையுள்ளது. சுமார் 6 மாதங்களுக்கு முன் இதேபோன்று புதர் வளர்ந்திருந்ததை சமூக அமைப்பு ஒன்று அப்புறப்படுத்தியது. தற்போது அரசு கண்டு கொள்ளாததால் மீண்டும் புதர் மண்டியுள்ளது.

தூத்துக்குடி பெண் டாக்டர் கொலை விவகாரம் : தவறான சிகிச்சையால் மருமகள் பலி

தூத்துக்குடி இஎஸ்ஐ மருத்துவமனை தலைமை டாக்டராக சேதுலட்சுமி பணியாற்றினார். தனியாக சுபம் மருத்துவமனை நடத்தி வந்தார். இவருடைய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் நித்யா மரணம் அடைந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நித்யாவின் கணவர் மகேஷ் நண்பர்களுடன் சென்று கடந்த 2ம் தேதி டாக்டர் சேதுலட்சுமியை வெட்டி கொலை செய்தார். இந்நிலையில் மகேஷ் தாயும், நித்யாவின் மாமியாருமான கனகலட்சுமி சென்னையில் நேற்று அளித்த பேட்டி:
என் மருமகள் நித்யா 5 மாத கர்ப்பிணியாக இருந்தாள். அவளின் கால்கள் வீக்கமாக இருந்ததால், சுபம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். டாக்டர் சேதுலட்சுமி பரிசோதனை செய்து பார்த்துவிட்டு, பிரஷர் அதிகமா இருக்கிறது. ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என்று கூறினார். அவர் கூறியபடி ரூ 10 ஆயிரம் பணம் செலுத்தினோம். அதன் பின், நித்யாவை பெட்டில் படுக்க வைத்தனர். நள்ளிரவு 2 மணிக்கு நர்ஸ் வந்து பரிசோதனை செய்து பார்த்தார். நித்யாவுக்கு பிரஷர் குறையவில்லை என்ற அவர், டாக்டரிடம் போனில் பேசிவிட்டு நித்யாவுக்கு 3 ஊசிகளை போட்டார். அதன்பிறகு, நித்யாவின் கண்கள் உள்ளே சென்றன.
நித்யாவுடன் மகேஷ்
நித்யா, "மூச்சுவிடவே மிகவும் கஷ்டமாக இருக்கிறது" என்று கூறி வாயை திறந்து திறந்து மூடினாள். இதை நர்சிடம் கூறினோம். மயக்க ஊசி போட்டால் அப்படித்தான் இருக்கும் என நர்ஸ் கோபமாக தெரிவித்தார். அதிகாலை 5 மணிக்கு ஆபரேஷன் செய்ய நித்யாவை டாக்டர் அழைத்து சென்றார். 8 மணிக்கு பிறகு வெளியே வந்த டாக்டர், நித்யாவின் நிலை மிகவும் மோசமாக உள்ளதால் வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறினார்.
உள்ளே சென்று பார்த்தபோது மருமகள் நிர்வாண நிலையில், வயிறு கிழிக்கப்பட்டு கிடந்தாள். வயிற்றில் தையல் கூட போடவில்லை. அவரை மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு தூக்கி சென்றோம். அங்கிருந்த டாக்டர்கள் பார்த்துவிட்டு, உங்கள் மருமகள் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறினார். ஏதோ தேவையில்லாத மருந்துகளை கொடுத்து என்னுடைய மருமகளையும், குழந்தையையும் டாக்டர் கொன்று விட்டார்.
இதனால், ஆத்திரம் அடைந்த என் மகன் டாக்டரை 2ம் தேதி கொலை செய்தான். அவன் 8 மாதம் தான் திருமண வாழ்க்கை வாழ்ந்தான். 6ம் தேதி மகனை ஜெயிலில் போய் பார்த்தோம். என் வாழ்க்கை முடிந்து விட்டது என்று அழுது கொண்டே கூறினான். நாங்கள் வறுமையில் வாழ்கிறோம். உதவுவதற்கு கூட யாரும் இல்லை. நாங்கள் எங்கே போவது. தமிழக முதல்வர்தான், என் மகனை மன்னித்து வெளியே விட வேண்டும் என்று கண்ணீர் விட்டு அழுதார். பேட்டியின் போது கனகலட்சுமி கணவர் ராஜபாண்டியன் உடனிருந்தார்.
பொதுநலன் காவலர்கள் நிறுவனத் தலைவர் டாக்டர் எம்.மீனாட்சி சுந்தரம் கூறுகையில், "மரணமடைந்த நித்யாவின் குடும்பத்திற்கு சுபம் மருத்துவமனை மற்றும் தமிழக சுகாதாரத்துறை இணைந்து ரூ 10  லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும். நித்யாவின் மரணத்தின் உண்மையை அறிய நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். இந்த சம்பவத்தின் உண்மையை தமிழக முதல்வருக்கு மனுவாக கொடுத்துள்ளோம்” என்றார்.
தடை விதிக்க வேண்டும்
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை கிடைப்பதில்லை. 99 சதவீதம் அரசு டாக்டர்கள் வெளியில் பணியாற்றுகின்றனர். இதனால், சிகிச்சை பலனின்றி ஏராளமான நோயாளிகள் இறக்கின்றனர். மத்திய அரசில் பணி புரியும் டாக்டர்கள் வெளியில் பணியாற்ற கூடாது என்று சட்டம் உள்ளது. இதேபோல், அரசு டாக்டர்கள் தனியாக மருத்துவமனைகள், கிளினிக்குகள் நடத்துவதற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். அப்போதுதான் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை கிடைக்கும் என்றும் டாக்டர் மீனாட்சி சுந்தரம் கூறினார்.

அதிர்ச்சி தகவல்கள் : மாணவர்களிடம் பரவும் புதுவித போதை பழக்கம்


பஞ்சர்ஒட்ட பயன்படும் சொல்யூசன்
ரப்பர் டியூப்புகளை ஒட்ட வும், பஞ்சர் ஒட்டவும் பயன்படும் சொல்யூசனை போதைக்காக பயன்படுத்தும், புதுவித பழக்கம் மாணவர்கள் சிலரிடம் பரவி இருக்கும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள் ளன. நாகர்கோவில் அருகே உள்ள பள்ளியில் இருந்து ஏராளமான சொல்யூசன் காலி டியூப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நாகர்கோவில் அருகே உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் மாணவர்கள் போதைக்காக பயன்படுத்தி விட்டு வீசி எறிந்த காலியான பசை டியூப்புகள்.
குமரி மாவட்ட பள்ளி மாணவர்கள் இடையே சமீப காலங்களாக புது வித போதை பழக்கம் பிரபலமாகி வருகிறது. வழக்கமாக சிகரெட், போதை பாக்குகள், புகையிலை என பயன்படுத்தும் மாணவர்கள் சிலர், இப்போது கெமிக்கல் வகைகளை போதைக்காக பயன்படுத்த தொடங்கி உள்ளனர். அந்த வகையில் ரப்பர் டியூப்புகளை ஒட்டுவதற்கு பயன்படுத்தப்படும் சொல்யூசனை தண்ணீரில் கலந்து குடிப்பது, தீயில் வாட்டி பின்னர் சொல்யூசன் பேஸ்டை கையில் வைத்து நுகர்ந்து பார்ப்பது என்பன போன்ற செய்கைகளில் இறங்கி இருக்கிறார்கள்.
இதை பயன்படுத்திய சில நிமிடங்கள் போதை அப்படியே தலைக்கேறி நிற்கும் என்பது இதை பயன்படுத்தி பழக்கப்பட்ட மாணவர்கள் சிலர் , சக மாணவர்களிடம் சொல்லும் வாக்கு மூலமாக இருக்கிறது. போதை ஏறியதற்கான எந்த வித மணமும் இல்லாமல் இருப்பதால் இதை பயன்படுத்துபவர்களை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. பள்ளி இடைவேளை நேரத்தில் கூட சில மாணவர்கள் வாடிக்கையாக பயன்படுத்துகிறார்கள்.இந்த நிலையில் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் இது போன்று சொல் யூசனை பயன்படுத்தி போடப் பட்ட காலி டியூப்புகள் கழிவறை மற்றும் பள்ளி வளாகங்களில் ஏராள மாக கிடப்பதாக தகவல் வந்ததன் பேரில், பொதுமக்கள் சிலர் நேற்று அந்த பள்ளிக்கு சென்று அவற்றை கைப்பற்றினர்.
பின்னர் இது குறித்து டவுன் டி.எஸ்.பி. பாஸ்கரன், பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவற்றை கைப்பற்றினர். நேற்று (ஞாயிறு) பள்ளி விடுமுறை என்பதால் இது தொடர்பாக விசாரணை நடத்த முடிய வில்லை. இன்று காலை இது தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறை முடிவு செய்துள்ளது.
சம்பவ இடத்துக்கு தலித் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவன தலைவர் தினகரன் என்பவரும் வந்திருந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், பூதப்பாண்டி, இறச்சக்குளம், புத்தேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் சிலரிடம் விசாரித்த போது இது போன்று சொல்யூசனை போதைக்காக பயன்படுத்தும் தகவல் கிடைத்தது. இப்போது பள் ளிக்கு வந்து பார்த்த பிறகு தான், இந்த தகவல் உண்மை என தெரிய வந்திருக்கிறது. இதை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் கவனத்துக்கு கொண்டு சென்று இருக்கிறோம். மாணவர்களை இந்த போதை பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க வேண்டும். இது போன்று பயன்படுத்துவதால் அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியும். எனவே பள்ளிகளில் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளோம் என்றார்.
சம்பவ இடத்துக்கு தலித் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவன தலைவர் தினகரன் என்பவரும் வந்திருந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், பூதப்பாண்டி, இறச்சக்குளம், புத்தேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் சிலரிடம் விசாரித்த போது இது போன்று சொல்யூசனை போதைக்காக பயன்படுத்தும் தகவல் கிடைத்தது. இப்போது பள்ளிக்கு வந்து பார்த்த பிறகு தான், இந்த தகவல் உண்மை என தெரிய வந்திருக்கிறது. இதை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் கவனத்துக்கு கொண்டு சென்று இருக்கிறோம். மாணவர்களை இந்த போதை பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க வேண்டும். இது போன்று பயன்படுத்துவதால் அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியும். எனவே பள்ளிகளில் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளோம் என்றார்.
மூளையை பாதிக்கும்
இது தொடர்பாக அருமநல்லூர் பகுதியை சேர்ந்த டாக்டர் ஒருவர் கூறியதாவது :
வழக்கமாக கெமிக்கல் கலந்த பொருட்களை போதைக்காக பயன்படுத்துபவர்கள் உள்ளனர். ஷூ பாலிஷை கூட தண்ணீரில் கலந்து குடித்து, போதையை ரசிப்பவர்கள் இருக்கிறார்கள். இது போன்ற கெமிக்கலை அதிகம் பயன்படுத்துவதன் மூலம் மூளை நரம்புகள் பாதிக்கப்படும். எதிர்காலத்தில் சிந்தனை திறன் குறைந்து ஒரு மன நோயாளியாக கூட மாற்றி விடுவர். எனவே இது போன்ற பழக்கத்தில் இருந்து மாணவர்களை மீட்டெடுக்க வேண்டியது மிகப்பெரிய பொறுப்பு ஆகும் என்றார்.  (Dinakaran)