மதுரையில் ஓட்டலில் பணம் வைத்து சூதாடிய 2 சப் இன்ஸ்பெக்டர்கள், 2 போலீசார் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 போலீசார் தப்பிச் சென்றனர்.
மதுரை ரிங் ரோட்டில் உத்தங்குடி சந்திப்பு அருகே உள்ள ஒரு ஓட்டலில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக எஸ்பி அஸ்ரா கர்க்கிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சின்னப்பாண்டி தலைமையில், செக்காணூரணி இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ உள்பட பலர் இடம் பெற்ற தனிப்படையினர் நேற்று நள்ளிரவில் குறிப்பிட்ட ஓட்டலில் திடீர் சோதனை நடத்தினர்.
இதில் ஒரு அறையில் 12 பேர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடிக்க முயன்றபோது 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். 9 பேர் சிக்கினர். அவர்களிடம் விசாரித்தபோது சிக்கியவர்களில் பலரும் போலீசார் என தெரியவந்தது. இதனால் ரெய்டுக்கு சென்ற போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
மதுரை மீனாட்சி கோயில் ஸ்டேஷன் எஸ்.ஐ. கூத்தபெருமாள்(57), திலகர் திடல் ஸ்டேஷன் எஸ்.ஐ. கருப்பையா(53), திலகர் திடல் போக்குவரத்து பிரிவு ஏட்டு பாலசுப்பிரமணியன்(42), எஸ்எஸ் காலனி ஸ்டேஷன் போலீஸ்காரர் பாலமுருகன்(46), லாட்ஜ் உரிமையாளர் வேலு(51), ஜேம்ஸ்(42), ராஜேந்திரன்(38), தர்மர்(50), வீரையா(47) ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை நகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சம்பள கணக்கு பிரிவில் பணியாற்றும் போலீஸ்காரர் தனுஷ், திலகர் திடல் ஸ்டேஷனில் பணியாற்றும் அசோக், திடீர் நகர் ஸ்டேஷனில் பணியாற்றும் ரவி ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.
கைதான 9 பேரும் மேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். சூதாட்ட வழக்கில் போலீசாரே சிக்கியுள்ளதும், ஒரே நேரத்தில் 7 போலீசார் சிக்கியதும் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.