குமரி மாவட்டத்தில் தற்போது கன்னிப்பூ சாகுபடி நடைபெற்று வருகிறது. சுமார் 12 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் பயிர் செய்யப்பட்டுள்ளது. தற்போது பயிர்களில் பால் வடியும் பருவம் ஆகும். இந்த சமயங்களில் படர்குருவிகள் மொத்தமாக வந்து பயிர்களில் உள்ள பால்களை உறிஞ்சி சென்று விடும். இப்படி உறிஞ்சி சென்று விட்டால் அந்த பயிர்கள் வளர்ச்சி இல்லாமல் கருகி விடும். இதையடுத்து படர் குருவிகள் வருவதை தடுக்க, விவசாயிகள் சில நூதன வழிகளை கையாள்வது வழக்கம்.
இதே போல் வடசேரியில் உள்ள வயல்களில் தற்போது நெற்பயிர்கள் பால் வடியும் பருவத்தில் உள்ளன. இதனால் படர் குருவிகள் மொத்தமாக வருவதை தடுக்க, விவசாயிகள் அதிகாலையிலேயே பட்டாசுகள் கொளுத்தி யும், மேளம் அடித்தும் விரட்டுகிறார்கள். ஒரு வயலில் இருக்கும்போது பட்டாசு கொளுத்தினால் அடுத்த வயலுக்கு குருவிகள் சென்று விடும். இதனால் தொடர்ந்து பட்டாசு கொளுத்த வேண்டும். இதே போல் டப்பாவை கழுத்தில் கட்டிக்கொண்டு மேளம் போல் தொடர்ந்து அடித்து கொண்டே வயல்களில் செல்கிறார்கள்.
இது குறித்து வடசேரியை சேர்ந்த விவசாயிகள் செல்வராஜ், ஐயப்பன் ஆகியோர் கூறும்போது, படர் குருவிகள் மொத்தமாக, மொத்தமாக வந்து வயலில் இறங்கும். ஒரே சமயத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குருவிகள் வருவது உண்டு. இவைகள் நெற்பயிர்களில் இருக்கும் பாலை உறிஞ்சி சென்று விடுவதால், தொடர்ந்து பயிர்களின் வளர்ச்சி பாதிக்கும். இதனால் தான் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என்றனர்.
No comments:
Post a Comment