Thursday, 1 December 2011

விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தகவல் : எச்ஐவி-க்கு எதிரி நம் உடம்பிலேயே இருக்கிறது

இன்று உலக எய்ட்ஸ் ஒழிப்பு தினம் : எய்ட்ஸ் மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் முன்னேற்றம்
மனிதர்கள் உள்பட எல்லா உயிரினங்களுக்கும் முக்கியமானது நோய் எதிர்ப்பு சக்தி. உடலை நோய் தாக்காமல் இருக்கவும் தாக்கிய நோயில் இருந்து விடுபடவும் இந்த சக்தியே பிரதானம். மனிதரின் உடலில் பரவும் எச்.ஐ.வி. (ஹியூமன் இம்யுனோ டெபீஷியன்சி வைரஸ்) கிருமி, ஆணிவேரையே அசைப்பதுபோல நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்க ஆரம்பிக்கிறது. உடலில் எதிர்ப்பு ஆற்றல் படிப்படியாக குறைகிறது. இதுவே எச்.ஐ.வி. பாதிப்பு அல்லது எய்ட்ஸ் எனப்படுகிறது.
ரத்தம் செலுத்துதல், ஸ்டெரிலைஸ் செய்யாத ஊசி பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் பரவும் என்றாலும் பாதுகாப்பற்ற உடலுறவுதான் முக்கிய காரணம். உலகம் முழுவதும் 3.34 கோடிக்கும் அதிகமானவர்கள் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் புதிது புதிதாக 27 லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். நோய் தீவிரமாகி ஆண்டுக்கு 20 லட்சம் பேர் இறக்கிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
உலக அளவில் அதிக உயிர் பலி வாங்கும் தொற்று நோயாக எய்ட்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. எய்ட்ஸ் பரவுவதை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பிரசாரம் நடக்கிறது. ஆண்டுதோறும் டிசம்பர் 1-ம் தேதி (இன்று) உலக எய்ட்ஸ் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. எய்ட்ஸ் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளும் தீவிரமாக நடக்கின்றன.
எச்.ஐ.வி. பாதிப்பு பற்றி இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலை, இங்கிலாந்து மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய மருத்துவ ஆய்வு நிறுவனம் இணைந்து சமீபத்தில் ஆய்வு நடத்தின. உடலில் எச்ஐவி கிருமிகள் பரவுவதை நம் உடம்பில் இருக்கும் புரோட்டீன் பொருள் ஒன்றே தடுத்து நிறுத்துவது ஆய்வில் தெரியவந்தது. இதுபற்றி தலைமை ஆராய்ச்சியாளர் மிகேல் வெப் கூறியதாவது:
எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமானால், எச்ஐவியின் குணம் பற்றி முழுதாக தெரிந்துகொள்வது அவசியம். லூக்கோசைட்ஸ் எனப்படும் ரத்த வெள்ளை அணுக்கள்தான் எதிர்ப்பு சக்தி செல்கள். இவற்றில் எச்ஐவி கிருமிகள் பல்கிப் பெருகுவதால் நோய் தீவிரம் அடைகிறது. நம் உடலிலேயே இருக்கும் எஸ்ஏஎம்எச்டி1 எனப்படும் புரோட்டீன், எச்ஐவி கிருமிகளின் எண்ணிக்கை பெருகாமல் தடுப்பதாக அமெரிக்க, பிரான்ஸ் விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்தனர். எச்ஐவிக்கு சங்கிலி இணைப்பு போன்ற இணைப்பை தந்து அதை பலப்படுத்தும் டீஆக்சி நியூக்ளியோடைட் பொருளை எஸ்ஏஎம்எச்டி1 புரோட்டீன் தகர்த்து செயலிழக்க செய்வதை தற்போது கண்டுபிடித்துள்ளோம்.
இதை மருந்தாக பயன்படுத்தினால், எச்ஐவி பரவாமல் தடுத்துவிடலாம். அதுபற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து நடக்கிறது. எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இது முக்கியமான மைல் கல்லாக கருதப்படுகிறது.
இவ்வாறு மிகேல் கூறினார்.

கூடங்குளம் விவகாரம் டிச.10ல் சென்னையில் உண்ணாவிரதம்

அணுசக்தி எதிர்ப்பு இயக்கம் அறிவிப்பு
கூடங்குளம் அணுமின் நிலையம் வேண்டாம் என்பதை வலியுறுத்தி சென்னையில் வரும் 10ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து இயக்கத்தின் அரசியல் குழு ஒருங்கிணைப்பாளர் மனோதங்கராஜ் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழர் நலன் சார்ந்த எந்த ஒரு பிரச்னையிலும் மத்திய அரசு ஆர்வம் காட்டாமல் இருந்து வரும் நிலையில், அணுமின் நிலையத்துக்கு எதிராக போராடும் மக்களை தேச துரோகிகள் என்று மத்திய அரசும் மத்திய அமைச்சர் நாராயணசாமியும் குற்றம் சாட்டி பேசுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.
அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் சென்னை கூட்டமைப்பு சார்பில் மனித உரிமை தினமான டிசம்பர் 10ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

சென்னையை தகர்க்க சதி : பாரிமுனை, ரிச்சி தெரு, மெரினாவுக்கு குறி

தீவிரவாதிகள் பற்றி வீடியோ ஆதாரம் சிக்கியதால் போலீசார் அதிர்ச்சி
பாரிமுனை, ரிச்சி தெரு, ரங்கநாதன் தெரு, மெரினா பகுதிகளை வேவு பார்த்ததோடு நாசவேலையில் ஈடுபட தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியதற்கான வீடியோ ஆதாரங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
சென்னை அருகே உள்ள தாம்பரம் சேலையூரில் உள்ள ஒரு வீட்டில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுடன் இந்தியன் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக மத்திய உளவுப் பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள், கடந்த 27&ம் தேதி காலை சென்னை மாநகர போலீஸ் உதவியுடன் அந்த வீட்டை சுற்றிவளைத்தனர். வீட்டில் இருந்த 6 மாணவர்கள் உள்பட 7 பேரை மடக்கிப் பிடித்தனர். மாணவர்களுடன் இருந்தவர் தடை செய்யப்பட்ட ‘சிமி’ அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் ‘இந்தியன் முஜாகிதீன்’ நிர்வாகியுமான இர்சாத் (50) என்பது தெரியவந்தது. பீகாரை சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர் அப்துல் ரகுமான், இர்சாத்துக்கு உதவியாக இருந்துள்ளார். இவர்களுடன் தங்கியிருந்த ஆசிப் என்பவர் தப்பியோடி விட்டதாக கூறப்பட்டது.

தீவிர விசாரணைக்கு பிறகு 5 மாணவர்களை மட்டும் போலீசார் விடுவித்தனர். இர்சாத், அப்துல் ரகுமான் ஆகியோரை கைது செய்து, தொடர்ந்து விசாரித்தனர். இசாத்திடம் மத்திய, மாநில உளவுப்பிரிவு போலீசார் விசாரித்தபோது, 2 நாட்களுக்கு முன்புதான் சென்னை வந்ததாகவும் பாரிமுனை, ரங்கநாதன் தெரு, ரிச்சி தெரு, மெரினா கடற்கரை ஆகிய இடங்களுக்கு சென்றதாகவும் அப்துல் ரகுமானுக்கு ஒரு லேப்டாப் வாங்கி கொடுத்ததாகவும் கூறியுள்ளார். தங்களுடன் ஆசிப் என்பவர் வந்ததாகவும், சேலையூர் வீட்டை போலீசார் சுற்றிவளைப்பதற்கு ஒரு மணி நேரம் முன்புதான் அவர் தப்பிச் சென்றதாகவும் இர்சாத் தெரிவித்தார். விசாரணைக்கு பிறகு இருவரும் டெல்லி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதற்கிடையே, பாரிமுனை மற்றும் ரிச்சி தெருவில் கண்காணிப்புக்காக பொருத்தப்பட்டிருந்த 80 கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் நேற்றிரவு போட்டுப் பார்த்தனர். ரிச்சி தெருவில் இர்சாத், ஆசிப், அப்துல் ரகுமான் ஆகியோர் கடை கடையாக சென்று லேப்டாப் பற்றி விசாரித்துள்ளனர். ஆசிப் மட்டும் நீண்ட நேரம் ரிச்சி தெருவையே சுற்றிச்சுற்றி வந்து வேவு பார்த்துள்ளார். இதேபோல பாரிமுனை பகுதியிலும் அவர் வேவு பார்த்துள்ளது கேமராவில் பதிவாகி இருந்தது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
விசாரணையின்போது, பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6&ம் தேதி பெங்களூரில் குண்டு வைக்க திட்டமிட்டிருந்தோம் என்று இர்சாத் தெரிவித்திருந்தார். ஆனால், அவர்கள் சென்னையில் நாசவேலைக்கு சதி திட்டம் தீட்டியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ரிச்சி தெரு, பாரிமுனை, ரங்கநாதன் தெரு, மெரினா கடற்கரை ஆகிய இடங்களில் டிசம்பர் 6&ம் தேதி குண்டு வைக்க முடிவு செய்திருக்கலாம் என்றும் அதற்காகத்தான் இந்த இடங்களை வேவு பார்த்துள்ளனர் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சேலையூரில் இருந்து தப்பிச் சென்ற ஆசிப் இதுவரை பிடிபடவில்லை. அவர் சென்னையிலோ, புறநகர் பகுதிகளிலோ அல்லது தமிழகத்தில் வேறு எங்காவது பதுங்கி இருக்கலாம் என்று கருதுகின்றனர். ஆசிப்பை பிடித்தால்தான் முழு சதி திட்டமும் தெரியவரும். தீவிரவாதிகளின் சதித் திட்டம் குறித்து தகவல்கள் கிடைத்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாகன சோதனையும் நடத்தப்படுகிறது.
டிஜிபியுடன் ஆலோசனை
டிஜிபி ராமானுஜம், மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி ஆகியோருடன் மத்திய உளவுப் பிரிவு உயர் அதிகாரி ஒருவர் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, ‘சென்னையில் தீவிரவாதிகள் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. அதனால் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். தலைமறைவாக உள்ள ஆசிப்பை உடனடியாக கைது செய்ய வேண்டும்’ என்று மத்திய உளவுத்துறை அதிகாரி கூறியதாக தெரிகிறது.
பல இடங்களில் கேமரா பழுது
பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை தொடர்ந்து பராமரிப்பதோ, கண்காணிப்பதோ கிடையாது. பல இடங்களில் கேமராக்கள் பழுதாகி செயல்படாமல் உள்ளது. அசம்பாவிதம் எதுவும் நடக்கும் முன்பு போலீசார் விழித்துக் கொள்வது நல்லது.

ஐஸ்வர்யா குழந்தை போட்டோ - க்கு 5 கோடி : விற்க போகிறார்களா???

சில நாட்களுக்கு முன்பு தாத்தா பச்சன் குழந்தையை இளஞ்சிவப்பு கம்பளத்தில் ஏந்தியபடி ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் தங்கள் குழந்தையை மருத்துவமனை  யிலிருந்து வீட்டுக்கு எடுத்து வருவது போன்ற போட்டோ வெளிவந்தன.

அனால் குழந்தையின் போட்டோ இதுவரை ஊடகங்களுக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஊடகங்கள் குழந்தையின் முதல் படத்தை பெறுவதற்கு 5 கோடி ரூபாய் வரை அளிக்க முன்வந்ததாக அறியபடுகின்றன.

அதே நேரம் தாத்தா பிக் பி ட்வீட்டர் - ல் "To those that clamour for baby's picture, I have said it before, it will not be happening... do understand, it's personal." இவ்வாறாக தெரிவித்துள்ளார். முன்பு ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் திருமண விழா புகைப்படங்கள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளி வந்தன. பச்சன் குடும்பம் அவ்வாறு செய்யவில்லை.

பொறுத்திருந்து பார்ப்போம்.... உண்மை தெரியும்...

நாடு முழுவதும் வியாபாரிகள் போராட்டம் : இன்று கடைகள் அடைப்பு

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து நாடு முழுவதும் வியாபாரிகள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சில்லரை வணிகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது என்று மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.
இந்த முடிவை கைவிட வேண்டும் என்று நாடு முழுவதும் வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதா, உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி ஆகியோர் அன்னிய நிறுவனங்கள் தடை செய்யப்படும் என்று அறிவித்தனர்.
மேலும், தமிழகத்தில் வணிகர்கள் சங்க பேரமைப்பு சார்பில் அதன் தலைவர் விக்கிரமராஜா மாநிலம் முழுவதும் வியாபாரிகள் கடையடைப்பு நடத்துவார்கள் என்று அறிவித்தார். அதேபோல, மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் அறிவித்தார்.
மேலும் முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக தலைவர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலா ளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன், பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதோடு பல தலைவர்கள் போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வணிகர்களின் இந்தப் போராட்டத்துக்கு மளிகைக் கடை வியாபாரிகள், டீ கடை வியாபாரிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும் வியாபாரிகள் கடைகளை அடைக்க வேண்டும் என்று அனைத்து கடைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். ஆனால் தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் மட்டும்
சென்னை ஓட்டல்கள் சங்கத் தலைவர் கே.டி.சீனிவாச ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், வணிகர் சங்கங்களின் இதர அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பை வழங்குவது என தீர்மானிக்கப்பட்டு, பால், தண்ணீர், மருத்துவம் போன்றே ஓட்டல் மற்றும் உணவகங்கள் அத்தியாவசியப் பொருட்களின் அடிப்படையில் இருப்பதாலும், பொது மக்களின் நலன் கருதியும், ஓட்டல் மற்றும் உணவகங்கள் வழக்கம்போல திறந்திருக்கும்’ என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
எனினும், டீக்கடைகள் கடையடைப்பில் பங்கேற்பதால், அவை மூடியிருக்கும்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி பெங்களூர் உட்பட கர்நாடகா முழுவதும் உள்ள ஏபிஎம்சி விற்பனை மையம் மற்றும் கர்நாடக வர்த்தக சங்கம் இணைந்து ஒருநாள் அடையாள கடையடைப்பு போராட்டத்தை இன்று நடத்துவதாக அறிவித்துள்ளது.