இன்று உலக எய்ட்ஸ் ஒழிப்பு தினம் : எய்ட்ஸ் மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் முன்னேற்றம்
மனிதர்கள் உள்பட எல்லா உயிரினங்களுக்கும் முக்கியமானது நோய் எதிர்ப்பு சக்தி. உடலை நோய் தாக்காமல் இருக்கவும் தாக்கிய நோயில் இருந்து விடுபடவும் இந்த சக்தியே பிரதானம். மனிதரின் உடலில் பரவும் எச்.ஐ.வி. (ஹியூமன் இம்யுனோ டெபீஷியன்சி வைரஸ்) கிருமி, ஆணிவேரையே அசைப்பதுபோல நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்க ஆரம்பிக்கிறது. உடலில் எதிர்ப்பு ஆற்றல் படிப்படியாக குறைகிறது. இதுவே எச்.ஐ.வி. பாதிப்பு அல்லது எய்ட்ஸ் எனப்படுகிறது.
ரத்தம் செலுத்துதல், ஸ்டெரிலைஸ் செய்யாத ஊசி பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் பரவும் என்றாலும் பாதுகாப்பற்ற உடலுறவுதான் முக்கிய காரணம். உலகம் முழுவதும் 3.34 கோடிக்கும் அதிகமானவர்கள் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் புதிது புதிதாக 27 லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். நோய் தீவிரமாகி ஆண்டுக்கு 20 லட்சம் பேர் இறக்கிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
உலக அளவில் அதிக உயிர் பலி வாங்கும் தொற்று நோயாக எய்ட்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. எய்ட்ஸ் பரவுவதை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பிரசாரம் நடக்கிறது. ஆண்டுதோறும் டிசம்பர் 1-ம் தேதி (இன்று) உலக எய்ட்ஸ் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. எய்ட்ஸ் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளும் தீவிரமாக நடக்கின்றன.
எச்.ஐ.வி. பாதிப்பு பற்றி இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலை, இங்கிலாந்து மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய மருத்துவ ஆய்வு நிறுவனம் இணைந்து சமீபத்தில் ஆய்வு நடத்தின. உடலில் எச்ஐவி கிருமிகள் பரவுவதை நம் உடம்பில் இருக்கும் புரோட்டீன் பொருள் ஒன்றே தடுத்து நிறுத்துவது ஆய்வில் தெரியவந்தது. இதுபற்றி தலைமை ஆராய்ச்சியாளர் மிகேல் வெப் கூறியதாவது:
எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமானால், எச்ஐவியின் குணம் பற்றி முழுதாக தெரிந்துகொள்வது அவசியம். லூக்கோசைட்ஸ் எனப்படும் ரத்த வெள்ளை அணுக்கள்தான் எதிர்ப்பு சக்தி செல்கள். இவற்றில் எச்ஐவி கிருமிகள் பல்கிப் பெருகுவதால் நோய் தீவிரம் அடைகிறது. நம் உடலிலேயே இருக்கும் எஸ்ஏஎம்எச்டி1 எனப்படும் புரோட்டீன், எச்ஐவி கிருமிகளின் எண்ணிக்கை பெருகாமல் தடுப்பதாக அமெரிக்க, பிரான்ஸ் விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்தனர். எச்ஐவிக்கு சங்கிலி இணைப்பு போன்ற இணைப்பை தந்து அதை பலப்படுத்தும் டீஆக்சி நியூக்ளியோடைட் பொருளை எஸ்ஏஎம்எச்டி1 புரோட்டீன் தகர்த்து செயலிழக்க செய்வதை தற்போது கண்டுபிடித்துள்ளோம்.
இதை மருந்தாக பயன்படுத்தினால், எச்ஐவி பரவாமல் தடுத்துவிடலாம். அதுபற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து நடக்கிறது. எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இது முக்கியமான மைல் கல்லாக கருதப்படுகிறது.
இவ்வாறு மிகேல் கூறினார்.
No comments:
Post a Comment