இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை 19ம் தேதிக்குள் மீட்காவிட்டால், ராமேஸ்வரத்தில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என மீனவர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
ராமேஸ்வரத்தில் இருந்து நூற்றுக்கும் அதிகமான விசைப்படகு மீனவர்கள், கடந்தமாதம் 28ம் தேதி கடலுக்குச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், தங்கச்சிமடம் கிளாட்வின் என்பவரது படகில் இருந்த மீனவர்கள் எமர்சன், பிரசாந்த், வில்சென்ட், அகஸ்டீஸ், போல்டேத் ஆகியோரை சிறை பிடித்தனர். இவர்கள் 5 பேர் மீதும், போதைப்பொருள் கடத்தியதாக இலங்கை ஊர்க்காவல் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்ட இவர் களது காவலை, வரும் 19ம் தேதி வரை நீட்டித்து, மல்லாகம் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் உத்தரவிட்டது. மீனவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்யக் கோரியும், அவர்களை மீட்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் பகுதி மீனவர் சங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் தொழில் இல்லாமல் கஷ்டத்தில் உள்ளனர்.
தொடர் போராட்டத்தை கைவிடக்கோரி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மீனவ சங்க பிரதிநிதிகளுடன் கலெக்டர் அருண்ராய் தலைமையில் நேற்று காலை பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஆர்டிஓ முத்துக்குமரன் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர். 14 மீனவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய கலெக்டர், “இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க அங்கு வக்கீல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசும், மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே மீனவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்” என்றார். ஆனால் கலெக்டரின் வேண்டுகோளை மீனவர்கள் ஏற்க மறுத்தனர். மீனவர்களை விடுதலை செய்வதோடு, அவர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதுவரை போராட்டம் தொடரும் எனவும் அறிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
மீனவ சங்க பிரதிநிதிகள் கூறுகையில், ‘சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை வரும் 19ம் தேதிக்குள் விடுதலை செய்யாவிட்டால், ராமேஸ்வரத்தில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம்’ என்றனர்.