Wednesday 7 December 2011

பால் பவுடரில் கதிரியக்க பாதிப்பு : ஜப்பான் நிறுவன 4 லட்சம் டின் வாபஸ்

குழந்தைகளுக்கான பால் பவுடரில் கதிரியக்க பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதால், ஜப்பானை சேர்ந்த மெய்ஜி நிறுவனம் விற்க அனுப்பப்பட்ட 4 லட்சம் டின்களை திரும்ப பெறுகிறது. இது ஜப்பானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானில் கடந்த மார்ச் 11&ம் தேதி பயங்கர பூகம்பமும் தொடர்ந்து பயங்கர சுனாமியும் ஏற்பட்டது. பல நகரங்களில் பேரழிவு ஏற்பட்டது. புகுஷிமா நகரில் உள்ள டாய்ச்சி அணு உலை பாதிக்கப்பட்டது. அணுஉலையை குளிர்விக்கும் கருவிகள் செயலிழந்ததால், கதிரியக்க தனிமங்கள் உருகின. கதிரியக்கமும் வெளியேறியது. பசிபிக் பெருங்கடல் வழியாக இந்த கதிரியக்க பாதிப்பு பரவுவதாக கூறப்பட்டது. மீன், நண்டு உள்ளிட்ட கடல் உணவுகள், காய்கறிகள், பழங்கள், டீ, பால் ஆகியவற்றில் கதிரியக்க பாதிப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. கதிரியக்க தன்மை இருந்தாலும், அபாயகரமான அளவுக்கு இல்லை என்று அரசு தரப்பு விளக்கம் அளித்து வருகிறது.
இந்நிலையில், மெய்ஜி என்ற நிறுவனத்தின் பால் பவுடரில் கதிரியக்க பாதிப்பு இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:  
மெய்ஜி பால் பவுடரில் கதிரியக்க சீசியம் தனிமம் இருப்பது ஆய்வில் தெரியவந்திருக்கிறது. ஒரு கிலோ பால் பவுடரில் 200 பெக்கரல் என்ற அளவுக்கு சீசியம் இருக்கலாம் என்று ஜப்பான் அரசு கூறுகிறது. அதைவிட பல மடங்கு குறைவாக 30.8 பெக்கரல் அளவுக்கே எங்கள் பால் பவுடரில் சீசியம் உள்ளது. ஆனாலும், 4 லட்சம் டின்களை திரும்ப பெற முடிவு செய்துள்ளோம். பால் பவுடர் தயாரிக்கும்போது அதை காயவைப்பதற்கு வெப்ப காற்று பயன்படுத்தப்படும். புகுஷிமா அணுஉலையில் இருந்து பரவிய கதிரியக்கம், காற்று மூலம் பால் பவுடரில் சேர்ந்திருக்கலாம் என்று கருதுகிறோம்.
இவ்வாறு மெய்ஜி நிறுவன அதிகாரிகள் கூறினர். மெய்ஜி பால் பவுடர், ஜப்பானில் மட்டுமே விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.       (Tamil Murasu)

No comments:

Post a Comment