மத்திய அமைச்சர் சரத்பவாரை கன்னத்தில் அறைந்தது தப்பில்லை என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் மத்திய அமைச்சர் சரத்பவாரை சீக்கிய இளைஞர் ஒருவர் கன்னத்தில் அறைந்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கட்சி பாகுபாடு இன்றி அனைத்து தலைவர்களும் இந்த சம்பவத்தை கண்டித்தனர். இந்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ‘ஒரு அறை தானா?’ என அன்னா பதில் கேள்வி எழுப்பினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காந்தியவாதி என கூறிக் கொள்ளும் அன்னா, வன்முறையை ஊக்குவிக்கலாமா என அன்னாவின் ஆதரவாளர்களும் கேள்வி எழுப்பினர்.
இதை தொடர்ந்து சரத்பவார் தாக்கப்பட்டதற்கு அன்னா ஹசாரே கண்டனம் தெரிவித்தார். சரத்பவார் சம்பவத்தை கேலி செய்யவில்லை என விளக்கம் அளித்தார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அன்னா மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து இணையதளத்தில் அவர் தெரிவித்துள்ள கருத்து:
மகாராஷ்டிராவில் கடந்த ஆட்சியின்போது தேசியவாத காங்கிரசை சேர்ந்த 3 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய சவாந்த் கமிஷன், 3 அமைச்சர்களுக்கும் ஊழலில் தொடர்பு இருப்பதை உறுதி செய்தது. இதை தொடர்ந்து அவர்கள் பதவியிலிருந்து விலகினார்கள். ஆனால் அவர்கள் மீது சரத்பவார் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 5 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். ஊழல்வாதிகளை காப்பாற்றும் பழக்கம் சரத்பவாருக்கு உள்ளது. அவரை அறைந்ததற்காக அரசியல்வாதிகள் கோபப்படுகிறார்கள். ஆனால் நியாயமான கோரிக்கைக்காக போராட்டம் நடத்தும் விவசாயிகள் மீது தடியடி நடத்தப்படுகிறது. துப்பாக்கி சூடு நடத்தப்படுகிறது. இதற்காக அவர்கள் கோபப்படவில்லை. இளைஞர் எதற்காக அறைந்தார் என்பது குறித்து யோசித்து பார்க்க வேண்டும். நாளுக்கு நாள் ஊழல் அதிகரித்து வருகிறது. எல்லை மீறும் போது ஒரு சிலர் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்கிறார்கள்.
இவ்வாறு அன்னா ஹசாரே கூறியுள்ளார். (Tamil Murasu)
No comments:
Post a Comment