மின்வாரியத்தின் அலட்சிய போக்கால், கடந்த 4 ஆண்டுகளில் வெறும் 92 மெகா வாட் மட்டுமே கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2006&07ம் ஆண்டில் மொத்த மின்தேவை 10,098 மெகா வாட். அப்போது, மொத்தம் 1 கோடியே 85 லட்சம் மின் நுகர்வோர்கள் இருந்தனர். அப்போதைய மின்பற்றாக்குறை 300 மெகா வாட் ஆக இருந்தது. தற்போது, தமிழ்நாட்டில் 2.23 கோடி மின் நுகர்வோர்கள் இருப்பதால், ஒரு நாளின் மின்சார தேவை 10,500 முதல் 12,000 மெகா வாட் ஆக அதிகரித்திருக்கிறது.
அனல், நீர், காற்று உள்ளிட்டவை மூலம் ஏறத்தாழ 10,122 மெகாவாட் மின் உற்பத்தியை மின்சார வாரியம் செய்கிறது. இதில், காற்றாலை மின் உற்பத்தி தற்போது மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கிறது. தற்போது 2,500 முதல் 3,000 மெகா வாட் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மின்பற்றாக்குறையை சமாளிக்க வெளிச்சந்தையில் யூனிட் ஒன்றுக்கு ரூ 7 முதல் ரூ 13 வரை விலை கொடுத்து வாங்கப்படுகிறது. ஆனால், மின்சார பற்றாக்குறையை தீர்க்க உருவாக்கப்பட்ட மின்திட்டங்கள், திட்டமிட்ட காலத்துக்குள் முடிக்காமல், பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டில் மொத்தம் 10,122 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது, 10,214 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் வெறும் 92 மெகா வாட் மட்டுமே மின்வாரியம் கூடுதலாக உற்பத்தி செய்துள்ளது, நுகர்வோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. மீதமுள்ள மின்திட்டங்கள் திட்டமிட்டப்படி செயல்படுத்தாமல், பல மாதங்களுக்கு மாற்றி அமைக்கப்பட்டு வருவதே, மின்பற்றாக்குறைக்கு காரணம். இதனால், வெளிசந்தையில் அதிக விலைக்கு மின்சாரம் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் ரூ 19 ஆயிரம் கோடிக்கு மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டுக்கு மின்சாரம் வாங்க ரூ 23 ஆயிரத்து 360 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மின்வாரியத்தின் ஒரு நாள் வருமானம் ரூ 60 கோடி. இதில் மின்சாரம் வாங்குவதற்கு மட்டுமே ரூ 50 கோடி வரை செலவிடப்படுகிறது. இப்படி மின்சாரம் வாங்கவே பல ஆயிரம் கோடி கணக்கில் செலவிடும்போது, வாரியம் நஷ்டம் ஏற்படாமல் எப்படி லாபத்தில் இயங்கும் என்பது சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும், ஆண்டுதோறும் மின் நுகர்வோர் எண்ணிக்கை 9 முதல் 10 சதவீதம் அதிகரிக்கிறது என்று தெரிந்திருந்தும், அதற்கான திட்டப்பணிகளை முடுக்கிவிடாமல் இருந்தது, மின்வாரியத்தின் அலட்சியமே காரணம். இறுதியாக, வாரியத்துக்கு பெரிய நஷ்டம் என்று கூறி மக்களின் தலையில் கட்டண உயர்வாக விழுகிறது.
இழுத்தடிப்புக்கு காரணம் என்ன?
கடந்த 2007ம் ஆண்டில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 3,225 மெகா வாட் மின்உற்பத்திக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. திட்டமிட்டப்படி, இதில் பெரும்பாலான பணிகள் முடித்திருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான மின்நிலையங்களில் தற்போது 75 சதவீத பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. வடசென்னையில் 600 மெகா வாட் கொண்ட மின் உற்பத்தி நிலையத்தில், திட்டமிட்டப்படி கடந்த பிப்ரவரி மாதத்திலேயே பணிகள் முடித்து, மே மாதத்தில் உற்பத்தி தொடங்கி இருக்க வேண்டும். தற்போது, தேதி மாற்றப்பட்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதேபோல், வடசென்னையிலேயே மற்றொரு 600 மெகா வாட் கொண்ட உற்பத்தி நிலையத்தில், கடந்த ஆகஸ்டில் பணிகள் முடிக்கப்பட்டு, நவம்பர் மாதத்தில் உற்பத்தி தொடங்கி இருக்க வேண்டும். இதுவும், தற்போது தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேட்டூரில் 600 மெகா வாட் கொண்ட மின் உற்பத்தி நிலையம், திட்டமிட்டப்படி கடந்த ஏப்ரலில் பணிகள் முடிக்கப்பட்டு, ஜூலையில் உற்பத்தி தொடங்கி இருக்க வேண்டும். இது, கடந்த செப்டம்பர் மாதத்துக்கு மாற்றப்பட்டு இருந்தது. பின்னர், தற்போது 2வது முறையாக 2012 மார்ச் மாதத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதேபோல், தூத்துக்குடியில் 500 மெகா வாட் மின் உற்பத்தி நிலையத்தில், வரும் ஜனவரியில் பணிகள் முடிக்கப்பட்டு, மார்ச்சில் உற்பத்தி தொடங்க வேண்டும். ஆனால், இதற்கான பணிகளும் தாமதமாகவே நடக்கிறது.
மேற்கண்ட திட்டப் பணிகளில் தற்போது 70 சதவீத பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணு மின்நிலையத்தில் மொத்த திட்டப்பணிகளும் முடிக்கும்போது, தமிழகத்துக்கு 925 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும். இதற்கிடையே, அணு மின்நிலையத்தில் பணிகள் முடிக்கும் நிலையில், எதிர்ப்பு போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இதனால், இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுமா.? அதன் மூலம் மின்சாரம் கிடைக்குமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. (Dinakaran)