அறிவியலுக்கு மதிப்பெண் தளர்வு
எந்த ஆண்டும் இல்லாத வகையில், இந்த ஆண்டு 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் செய்முறைத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், 25 மதிப்பெண் செய்முறைக்கும், 75 மதிப்பெண்கள் எழுத்துத் தேர்வுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
செய்முறையில் 20 மதிப்பெண்கள், எழுத்துத் தேர்வில் 35 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று முதலில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு தேர்வில் அறிவியல், கணக்கு பாடங்களில்தான் அதிக அளவில் மாணவர்கள் தோல்வி அடைகின்றனர். இதனால், அந்த பாடங்களில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது.
மேலும், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில், செய்முறை தேர்வில் 20 மதிப்பெண், எழுத்துத் தேர்வில் 15 மதிப்பெண் எடுத்து மொத்தம் 35 மதிப்பெண்கள் அறிவியல் பாடத்தில் எடுத்தால் தேர்ச்சி என்று அறிவிக்கவும் தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக அரசு தனியாக ஒரு உத்தரவையும் பிறப்பித்துள்ளது. ஆனால், எழுத்துத் தேர்வில் 35 அல்லது அதற்கு மேலும் மதிப்பெண் எடுத்து, செய்முறையில் 20 மதிப்பெண்ணுக்கு குறைவாக எடுத்தால் தோல்வி தான்.
இந்த புதிய திட்டத்தின்படி கிராமப்புற மாணவர்களும் அறிவியல் பாடத்தில், இந்த ஆண்டு அதிக அளவில் தேர்ச்சி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு சமச்சீர் கல்வி முறையில், பத்தாம் வகுப்பில் கணக்கு, அறிவியல் பாடங்கள் சற்று கடினமாக உள்ளது. இதுதான், மாணவர்களை கவலை அடையச் செய்துள்ளது. இந்த ஆண்டு பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால், பத்தாம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகளை மார்ச்சில் நடத்த தேர்வுத் துறை உத்தேசித்துள்ளது.
No comments:
Post a Comment