Friday, 16 December 2011

கோயிலுக்குள் தலித்கள் நுழைய திடீர் தடை : சேலத்தில் பரபரப்பு

சேலம் அம்மாபேட்டையில் தனியார் கோயிலுக்குள் எஸ்.சி., மக்கள் நுழையக்கூடாது என திடீர் தடை விதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோயிலை பெண்கள் முற்றுகையிட்டனர்.
சேலம் அம்மாபேட்டை கிருஷ்ணா நகரில் சீதா ராமச்சந்திரமூர்த்தி தேவஸ்தானத்துக்கு சொந்தமான ராமர் கோயில் உள்ளது. 1986ம் ஆண்டில் இந்த கோயில் கட்டப்பட்டது. கிருஷ்ணா நகர், வித்யா நகர், பச்சப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த அனைத்து சமூகத்தினரும் வழிபட்டு வந்த நிலையில், திடீரென்று நேற்று முதல் பச்சப்பட்டியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது என தடை விதிக்கப்பட்டது.
இதுகுறித்த நோட்டீஸ் கோயில் கதவுகளில் ஒட்டப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மறு தீர்மானம் நிறைவேற்றும் வரை கோயில் நடை சாத்தப்படுகிறது என்றும் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோயில் நிர்வாகத்தின் திடீர் முடிவால், தாழ்த்தப்பட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்பகுதியைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட ஆண், பெண்கள் கோயில் முன் திரண்டுவந்து தேவஸ்தான நிர்வாகிகளைக் கண்டித்து கோஷம் போட்டனர். தடை அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதுகுறித்து பச்சப்பட்டியைச் சேர்ந்த சித்ரா, சீரங்காயி, சுகுணா, ஜானகிராமன் ஆகியோர் கூறியது: இத்தனை ஆண்டுகளாக அனைத்து மக்களும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். கோயில் விரிவாக்கப் பணிகளுக்காக எங்களிடமும் நன்கொடை வசூலித்துள்ளனர். இந்நிலையில், தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் வரக்கூடாது என்பது ஜாதி மோதலை உருவாக்குவது போல உள்ளது. நிர்வாகத்தின் இந்த முடிவை வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கோயிலின் அர்ச்சகர் கண்ணன் கூறுகையில், “கோயில், நிர்வாகிகள் நேற்று இரவு 11 மணியளவில் கூடி, இந்த முடிவைஎடுத்துள்ளனர். இதுபற்றி, தேவஸ்தானத்தின் சிறப்பு ஆலோசகருக்கும் கூட எதுவும் தெரிவிக்கப்படவில்லை,’’ என்றார்.
இச்சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment