பெண்களிடம் அத்து மீறல் : கம்பம் மெட்டு அருகே பதற்றம்
தமிழகத்திலிருந்து கேரள தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்லும் ஜீப்புகளை கம்பம் மெட்டில் இன்று காலை வழிமறித்து, மிரட்டி கேரள கும்பல் பணம் பறிக்கும் அடிவாடியில் இறங்கியுள்ளது. மேலும் ஜீப்பில் இருந்த பெண்களை கீழே இழுத்து போட்டு வன்முறையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது. நில அதிர்வுகளால் அணை பலமிழந்து விட்டதாகவும் பேரழிவு ஏற்பட போகிறது என்றும் கேரள மக்களிடையே பீதி கிளப்பப்பட்டு வருகிறது. இதனால் அங்கு போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்நிலையில், கேரளாவில், தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்க துவங்கியுள்ளன. தமிழக பஸ்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. நேற்று பெரியாறு அணைக்குள் அத்துமீறி புகுந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும் தலைமதகு பகுதிக்குள் நுழைந்த அம்மாநில இளைஞர் காங்கிரசார் அராஜகத்தில் ஈடுபட்டனர்.
தமிழக பொதுப்பணித்துறை மற்றும் மின்வாரிய அலுவலகங்களை சூறையாடினர். பணியில் இருந்த ஊழியர்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வனப்பகுதிக்குள் ஓடி ஒளிந்தனர். முன்னதாக ஊர்வலமாக வந்த போது, உருட்டுக்கட்டைகளை கொண்டு கண்ணில் தென்பட்ட தமிழ் விளம்பர போர்டுகளை உடைத்தெறிந்து ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். அசம்பாவிதங்களை தடுக்க பெரியாறு அணையில் நூற்றுக்கணக்கான கேரள போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் உச்சகட்டமாக தற்போது கேரள எல்லையில் தமிழ் பெண்களை இழிவுபடுத்தும் செயலில் இறங்கியுள்ளனர். தேனி மாவட்டத்தில் சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர், கோம்பை, தேவாரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரள மாநிலம் நெடுங்கண்டம், கட்டப்பணை, மேட்டுக்குழி, மாழி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏலம், காபி தோட்டங்களுக்கு தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வருகின்றனர்.
தோட்ட உரிமையாளர்கள் ஜீப்புகளை மாத வாடகைக்கு பேசி, தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து செல்வர். தமிழ்நாட்டை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஜீப்புகள் கேரள மாநிலத்திற்கு தினசரி வேலையாட்களை ஏற்றி சென்று வருகின்றன.
இன்று காலை வேலையாட்களுடன் சென்ற ஜீப்புகளை கம்பம் மெட்டு கேரள எல்லையில் மறித்த சிலர், நாங்கள் புதிய அணை கட்ட வேண்டும். அதற்கு பணம் வசூலிக்கும் படி அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் கேரள மாநிலத்திற்குள் செல்ல வேண்டும் என்றால் ரூ.100 தர வேண்டும் என்று தகராறு செய்தனர்.
பணத்தை வாங்கிக் கொண்டு, டிரைவர் அசோசியேசன் என்று மலையாளத்தில் அச்சடித்த ரசீதை கொடுத்தனர். அதில், எந்த பதிவெண்ணும் கிடையாது. இதனால் சந்தேகமடைந்த ஒரு சில ஜீப் டிரைவர்கள், பணம் கொடுக்க முடியாது என்றனர். ஆத்திரமடைந்த அக்கும்பல், வேனில் அமர்ந்திருந்த தமிழ் பெண்களை வெளியே இழுத்துப் போட்டு ரகளையில் ஈடுபட்டனர். பணம் கொடுக்காமல் யாரும் கேரளாவுக்குள் நுழைய முடியாது என்று எச்சரித்தனர். இதனால் மற்ற ஜீப்புகளில் அமர்ந்திருந்த பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
கேரளா சென்ற ஜீப்புகளை மறித்து, பெண்களிடம் அத்துமீறி நடந்த சம்பவம் கம்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலர் வேலைக்கு செல்லாமல் மீண்டும் வீடு திரும்பி விட்டனர். இந்தச் சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடரும் கேரள மாநிலத்தவரின் அராஜக போக்கை தடுத்த நிறுத்த வேண்டும் என தமிழக மற்றும் மத்திய அரசை பல்வேறு அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளனர். (Tamil Murasu)