டெல்லியில் நாளை பேச்சுவார்த்தை
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய அரசு நாளை ஏற்பாடு செய்திருக்கும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டோம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு கூறி வருகிறது. கடந்த சில மாதங்களில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக, முல்லை பெரியாறு அணை பலவீனம் அடைந்திருப்பதாகவும், இதனால் அணை உடைந்து பேரழிவு ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும் அப்பகுதி மக்களிடையே கேரள அரசு பீதியை கிளப்பி வருகிறது. புதிய அணை கட்டியே தீர வேண்டும் என்று கேரளாவில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. இந்த விவகாரத்தில் தலையிட்டு, கேரளாவின் விஷம பிரசாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கேரள முதல்வர் உம்மன்சாண்டி கடிதம் எழுதியதுடன், பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று முன்தினம் டெல்லியில் நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார்.
இதையடுத்து, பிரச்னைக்கு தீர்வு காண தமிழகம், கேரளா ஆகிய இரு மாநில அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டுமாறு, மத்திய நீர்வளத்துறைக்கு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டார். இதையடுத்து, டெல்லியில் மத்திய அரசு அதிகாரிகளின் முன்னிலையில் தமிழக, கேரள அதிகாரிகளின் கூட்டம் நாளை நடைபெறும் என்று மத்திய நீர்வளத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதுகுறித்து, தமிழக கவர்னர் ரோசய்யாவை நேற்று சந்தித்து அவர் மனு கொடுத்தார். பல கட்சி தலைவர்களும் இந்த பேச்சுவார்த்தையில் தமிழக அரசு கலந்துகொள்ளக்கூடாது என வலியுறுத்தினர்.
இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக டெல்லியில் நாளை நடக்க உள்ள பேச்சுவார்த்தையில் தமிழக அரசு பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் எம்.சாய்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில், முல்லைப் பெரியாறு பிரச்னை தொடர்பாக டெல்லியில் 5ம் தேதி நடக்க உள்ள அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தையில், தமிழக அரசு ஏற்கனவே செய்த முடிவின்படி கலந்து கொள்ளாது என தலைமைச்செயலாளர் அறிவித்துள்ளார்’’ என்று கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தையை தமிழக அரசு புறக்கணித்துள்ள நிலையில் டெல்லியில் நாளை இக் கூட்டம் ரத்து செய்யப்படும் என தெரிகிறது.
No comments:
Post a Comment