Sunday 4 December 2011

நாகர்கோவில் நகராட்சி குப்பையிலிருந்து மின்சாரம்

புனே நிறுவனம் கலெக்டருடன் ஆலோசனை
நாகர்கோவில் நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் திடக் கழிவுகள் வலம்புரிவிளை உரக்கிடங்கு பகுதியில் கொட்டப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக இவ்வாறு கொட்டப்பட்ட கழிவுகள் மலைபோல் அங்கு தேங்கியுள்ளன. அப்பகுதியில் அவ்வப்போது தீவிபத்தும் ஏற்படுகிறது. இந்த உரக்கிடங்கை இடம்மாற்றும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.
பல்வேறு பகுதிகளில் இடம் தேர்வு செய்யப்பட்டும் அந்தந்த பகுதி மக்களின் எதிர்ப்பால் குப்பை கிடங்கு இடம்மாற்றம் செய்ய முடியாத நிலை உள்ளது. மக்கள் பிரதிநிதிகள் பலரும் தேர்தலின்போது உரக்கிடங்கை இடமாற்றம் செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதிகள் அளித்தும் கடந்த பல ஆண்டுகளாக அது நிறைவேற்றப் படவில்லை.
இந்நிலையில் மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக குப்பைகள் அதிகரித்துள்ளன. இந்த குப்பைகளை பயனுள்ளதாக மாற்றும் வகையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை நகராட்சியில் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது பிளாஸ்டிக் கழிவுகள், கேரி பேக்குகள் அடங்கிய மக்கும் குப்பைகள் அளவு குறைந்துள்ளதால் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என இரண்டாக பிரிக்கப் பட்டு மக்கும் குப்பைகள் அடங்கிய திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிப்பது குறித்து ஆலோசனை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கலெக்டர் மதுமதி தலைமை வகித்தார். நகராட்சி தலைவி மீனாதேவ், நகராட்சி ஆணையர் காளிமுத்து, பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் புனேயில் உள்ள தனியார் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடந்தது.
அடுத்த கட்ட ஆலோசனையை வரும் 10ம் தேதி மேற்கொள்வது எனவும் அன்று கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவது எனவும் மேலும் இந்த திட்டம் குறித்த செயல்முறை விளக்கத்தை செய்து காண்பிக்கவும் முடிவு செய்யப்பட்டது.   (Dinakaran)

No comments:

Post a Comment