Sunday 4 December 2011

சென்னையில் மட்டும் 50 ஏஜென்ட்கள் : அயல் நாடுகளுக்கு ஆள் கடத்தல்

அமோகமாய் நடக்கும் அதிர்ச்சி பிசினஸ்
அயல்நாடுகளுக்கு ஆள் கடத்தும் பிசினஸ் அமோகமாக நடக்கிறது சென்னையில் & இப்படியொரு தகவல், அதிலும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவது அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகத்தான் இருக்கும்.
அபின், ஹெராயின், ஆயுதம் என்று வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் பொருட்களின் பட்டியல் கொஞ்சம் பெருசு. அதிலே புதிதாக இடம் பிடித்திருப்பது ஆள் கடத்தல். அப்படியென்றால்? பணத்துக்காக ஆளை கடத்துவது பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். பணம் வாங்கிக் கொண்டு ஆளை கடத்துவது கேள்விப்படாத விஷயம். அதற்காக சென்னையில் 50 ஏஜென்ட்கள் வரை இருக்கிறார்கள் என்றால், இந்த வியாபாரம் எந்தளவுக்கு கொடிகட்டி பறக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அந்த 50 பேரும் விலை உயர்ந்த, வெளிநாட்டு இறக்குமதி கார்களில் வலம் வரக் கூடிய அளவுக்கு இதிலே பணம் புழங்குகிறது என்பதால், இந்த விவகாரத்தை சிபிஐ கையில் எடுக்க வேண்டும் என்ற பேச்சு, மெல்ல கிளம்பியுள்ளது.
அயல் நாடுகளுக்கு ஆள் கடத்தல் எப்படி நடக்கிறது? இங்கிருந்தோ அல்லது இலங்கையில் இருந்தோ ஒருவர், கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், இத்தாலி, நார்வே என ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டுக்கு செல்ல விரும்பினால், அவர்களை விரும்பிய நாட்டுக்கு பத்திரமாக கொண்டு போய் இறக்கி விடுவது தான் இந்த ஏஜென்ட்களின் வேலை.
அமெரிக்காவுக்கு மட்டும் அனுப்ப முடியாது; எனென்றால், அங்கே கெடுபிடிகள் அதிகம்.
கடத்தலுக்கு தேவைப்படும் விசா பெறுவதற்காக, இவர்கள் கைவசம் நிறைய ஐடியாக்கள் வைத்திருக்கிறார்கள். அதில் ஒன்றுதான் சினிமா ஷூட்டிங். அதற்கு இமிகிரேஷன், சிஐஎஸ்எப், கஸ்டம்ஸ் என பல துறை அதிகாரிகளில் சிலரும் உடந்தை. இத்தாலிக்கோ நார்வேக்கோ செல்ல விரும்பும் நபருக்கு 25 லட்சம் முதல் 50 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அவர்களுக்கு தேவையான பான் கார்டு, பாஸ்போர்ட் ஆகியவற்றை இங்கேயே ஏற்பாடு செய்து தருகின்றனர். லோக்கல் முகவரியுடன் எல்லாம் ஒரிஜனல்.
ஆனால், அந்த நாட்டில் இருந்து விசா பெறுவதில்தான் இவர்களிடம் வித்தியாசத்தை காண முடியும். அதாவது டூபாக்கூர் பெயரில் ஒரு சினிமா கம்பெனி ஆரம்பிப்பார்கள். அதன் படப்படிப்புக்காக அந்த நாட்டில் அனுமதி கேட்பார்கள். இங்கிருந்து படப்பிடிப்பு குழுவினர் 50 பேர் வரை வருவார்கள் என்று சொல்வார்கள். அந்த 50 பேருக்கும் �சங்கன்� விசா கிடைக்கும். அதை பயன்படுத்திக் கொண்டு, இலங்கையை சேர்ந்தவர்களையும், காபிபோசா, ஃபெரா போன்ற சட்டச் சிக்கலில் தேடப்படும் பெரிய முதலைகளையும், சினிமா கம்பெனி பேனரில் நாடு கடத்தி விடுவார்கள். ஒரு டிரிப்புக்கு ரூ 20 கோடி வரை பணம் பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. அதற்கு கைமாறாக பங்குப் பணம், அதிகாரிகள் சிண்டிகேட் வரைக்கும் போய் சேர்ந்து விடும். இதில் அதிகபட்ச தொகையை கொடுப்பது இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களே அதிகளவில் வெளிநாடுகளுக்கு செல்வதாக கூறப்படுகிறது. இதற்கான கட்டணம் கூட, சில நேரங்களில் பாதி இங்கே, மீதி அங்கே என்ற கணக்கில் வசூலிக்கப்படுகிறது.
கொச்சி, திருவனந்தபுரம், ஐதராபாத், சென்னை என பல வான் மார்க்கமாக ஆள் கடத்தல் தொழில் தடையின்றி நடந்து வருகிறது. அதை தடுக்க வேண்டியவர்கள் கண்டும் காணாமல் இருப்பதோடு மட்டுமல்ல; இப்படியொரு வியாபாரம் நடக்கிற தகவல் கூட கசியாமல் பார்த்துக் கொள்வார்கள். எதற்காக போகிறார்கள்? எத்தனை முறை போயிருக்கிறார்கள் என எதையும் ஆராய்வதில்லை. இதில் பிரபலங்களும் தெரிந்தோ, தெரியாமலோ சம்பந்தப்பட் டிருப்பதால், பணம் மட்டும் ரூ 500 கோடி வரை புழங்குவதாக தெரியவந்துள்ளது.
இதிலே அழைத்துச் செல்லப்படுபவர்கள் அங்கே இறங்கிக் கொண்டதும், ஏஜென்ட்களின் ஆட்களாக சென்ற குருவிகள் மட்டும் திரும்பி வருவது வழக்கம். அவர்களும் வெறும் கையோடு வருவதில்லை. எவ்வளவு முடியுமோ அவ்வளவு பொருட்களை கடத்தி வந்து விடுகின்றனர். அதில் தேறும் பணம் தனிக் கணக்கு.
சமீபத்தில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து இப்படி அனுப்பப்பட்ட கும்பல் பிடிபட்ட பிறகுதான் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதையடுத்து, இந்த விவகாரம் குறித்தும் அதன் பின்னணி பற்றியும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை, நேர்மையான அதிகாரிகள் மட்டத்தில் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment