அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் இல்லை என்ற நிலை தற்போது குமரி மாவட்டத்தில் மாறிவிட்டது என்று கலெக்டர் கூறினார்.
குமரி மாவட்ட தன்னார்வ நல குழுமம் சார்பில் நல வாழ்வு குழு உறுப்பினர்கள் கொண்ட புத்துணர்வு பயிற்சி முகாம் நாகர்கோவிலில் இன்று நடந்தது. கலெக்டர் மதுமதி பேசியதாவது:& அரசு திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடையவேண்டும் என்பதே அரசின் நோக்கம். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மக்கள் அதிக அளவில் செல்ல தொடங்கி உள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் பணம் கொடுத்து அளிக்கப்படும் சிகிச்சை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிடைக்கிறது. கர்ப்பிணி பெண்கள் இலவச மருத்துவ பரிசோதனை, ரத்த பரிசோதனை உள்ளிட்ட இலவச சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படுகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்றால் அங்கு டாக்டர் இருப்பது இல்லை என்ற நிலை மாறிவிட்டது. இது போன்ற விஷயங்களை நல்வாழ்வு குழுவினர் மக்களிடம் எடுத்து கூற வேண்டும். அரசு திட்டங்கள் முழுமையாக மக்களிடம் சென்றடைய அது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த தொண்டு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மதுசூதனன், மற்றும் தன்னார்வ நல்வாழ்வு குழுமத்தை சேர்ந்த உறுப்பினர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.