Thursday 8 December 2011

செல்போனால் பிரிந்த தம்பதியை ஓன்று சேர்த்தது செல்போன் சிக்னல் : கும்பகோணத்தில் சுவாரஸ்யம்

கணவன், மனைவி பிரிவுக்கு காரணமாக இருந்த செல்போனே, அவர்கள் மீண்டும் சேர்வதற்கு காரணமாக அமைந்தது.
இதுபற்றிய விவரம் வருமாறு: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரத்தை சேர்ந்தவர் தேவையன் (30). இவரது மனைவி ரேவதி (26). இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது. தேவையன் ஓராண்டுக்கு முன் வேலைக்காக வெளிநாடு சென்றுவிட்டார். அங்கிருந்து அவர் மனைவியை செல்போனில் தொடர்பு கொண்ட நேரங்களில் எல்லாம் ‘பிசி பிசி’ என பதில் வந்தால் மனைவி மீது தேவையனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த ரேவதி, கணவனுடன் கோபித்துக்கொண்டு குழந்தைகளை மாமியாரிடம் விட்டுவிட்டு கடந்த செப்டம்பர் 22ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். இதையறிந்த தேவையன் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். பல இடங்களில் தேடியும் மனைவி கிடைக்காததால், பட்டீஸ்வரம் போலீசில் புகார் செய்தார்.
ரேவதியின் செல்போன் சிக்னலை வைத்து விசாரித்தபோது, அவர் மும்பையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் அங்குள்ள ‘பிரேம் கிரண்‘ என்ற மறுவாழ்வு மையத்தில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த மையத்தை தொடர்பு கொண்ட போலீசார், அவரை ஊருக்கு அனுப்பும்படி கூறினார். ஆனால் அதற்கு ரேவதி மறுத்துவிட்டார்.
பின்னர் அந்த மைய மேலாளர் செல்வி, ரேவதியை சமாதானப்படுத்தி நேற்று பட்டீஸ்வரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தார். கணவன், மனைவி இருவருக்கும் தனித்தனியாக கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அதன் பின் கணவருடன் செல்ல ரேவதி சம்மதித்ததை அடுத்து போலீசார் அவரை, தேவையனுடன் அனுப்பி வைத்தனர்.  (தமிழ் முரசு)

No comments:

Post a Comment