Thursday, 1 December 2011

சென்னையை தகர்க்க சதி : பாரிமுனை, ரிச்சி தெரு, மெரினாவுக்கு குறி

தீவிரவாதிகள் பற்றி வீடியோ ஆதாரம் சிக்கியதால் போலீசார் அதிர்ச்சி
பாரிமுனை, ரிச்சி தெரு, ரங்கநாதன் தெரு, மெரினா பகுதிகளை வேவு பார்த்ததோடு நாசவேலையில் ஈடுபட தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியதற்கான வீடியோ ஆதாரங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
சென்னை அருகே உள்ள தாம்பரம் சேலையூரில் உள்ள ஒரு வீட்டில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுடன் இந்தியன் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக மத்திய உளவுப் பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள், கடந்த 27&ம் தேதி காலை சென்னை மாநகர போலீஸ் உதவியுடன் அந்த வீட்டை சுற்றிவளைத்தனர். வீட்டில் இருந்த 6 மாணவர்கள் உள்பட 7 பேரை மடக்கிப் பிடித்தனர். மாணவர்களுடன் இருந்தவர் தடை செய்யப்பட்ட ‘சிமி’ அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் ‘இந்தியன் முஜாகிதீன்’ நிர்வாகியுமான இர்சாத் (50) என்பது தெரியவந்தது. பீகாரை சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர் அப்துல் ரகுமான், இர்சாத்துக்கு உதவியாக இருந்துள்ளார். இவர்களுடன் தங்கியிருந்த ஆசிப் என்பவர் தப்பியோடி விட்டதாக கூறப்பட்டது.

தீவிர விசாரணைக்கு பிறகு 5 மாணவர்களை மட்டும் போலீசார் விடுவித்தனர். இர்சாத், அப்துல் ரகுமான் ஆகியோரை கைது செய்து, தொடர்ந்து விசாரித்தனர். இசாத்திடம் மத்திய, மாநில உளவுப்பிரிவு போலீசார் விசாரித்தபோது, 2 நாட்களுக்கு முன்புதான் சென்னை வந்ததாகவும் பாரிமுனை, ரங்கநாதன் தெரு, ரிச்சி தெரு, மெரினா கடற்கரை ஆகிய இடங்களுக்கு சென்றதாகவும் அப்துல் ரகுமானுக்கு ஒரு லேப்டாப் வாங்கி கொடுத்ததாகவும் கூறியுள்ளார். தங்களுடன் ஆசிப் என்பவர் வந்ததாகவும், சேலையூர் வீட்டை போலீசார் சுற்றிவளைப்பதற்கு ஒரு மணி நேரம் முன்புதான் அவர் தப்பிச் சென்றதாகவும் இர்சாத் தெரிவித்தார். விசாரணைக்கு பிறகு இருவரும் டெல்லி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதற்கிடையே, பாரிமுனை மற்றும் ரிச்சி தெருவில் கண்காணிப்புக்காக பொருத்தப்பட்டிருந்த 80 கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் நேற்றிரவு போட்டுப் பார்த்தனர். ரிச்சி தெருவில் இர்சாத், ஆசிப், அப்துல் ரகுமான் ஆகியோர் கடை கடையாக சென்று லேப்டாப் பற்றி விசாரித்துள்ளனர். ஆசிப் மட்டும் நீண்ட நேரம் ரிச்சி தெருவையே சுற்றிச்சுற்றி வந்து வேவு பார்த்துள்ளார். இதேபோல பாரிமுனை பகுதியிலும் அவர் வேவு பார்த்துள்ளது கேமராவில் பதிவாகி இருந்தது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
விசாரணையின்போது, பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6&ம் தேதி பெங்களூரில் குண்டு வைக்க திட்டமிட்டிருந்தோம் என்று இர்சாத் தெரிவித்திருந்தார். ஆனால், அவர்கள் சென்னையில் நாசவேலைக்கு சதி திட்டம் தீட்டியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ரிச்சி தெரு, பாரிமுனை, ரங்கநாதன் தெரு, மெரினா கடற்கரை ஆகிய இடங்களில் டிசம்பர் 6&ம் தேதி குண்டு வைக்க முடிவு செய்திருக்கலாம் என்றும் அதற்காகத்தான் இந்த இடங்களை வேவு பார்த்துள்ளனர் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சேலையூரில் இருந்து தப்பிச் சென்ற ஆசிப் இதுவரை பிடிபடவில்லை. அவர் சென்னையிலோ, புறநகர் பகுதிகளிலோ அல்லது தமிழகத்தில் வேறு எங்காவது பதுங்கி இருக்கலாம் என்று கருதுகின்றனர். ஆசிப்பை பிடித்தால்தான் முழு சதி திட்டமும் தெரியவரும். தீவிரவாதிகளின் சதித் திட்டம் குறித்து தகவல்கள் கிடைத்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாகன சோதனையும் நடத்தப்படுகிறது.
டிஜிபியுடன் ஆலோசனை
டிஜிபி ராமானுஜம், மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி ஆகியோருடன் மத்திய உளவுப் பிரிவு உயர் அதிகாரி ஒருவர் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, ‘சென்னையில் தீவிரவாதிகள் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. அதனால் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். தலைமறைவாக உள்ள ஆசிப்பை உடனடியாக கைது செய்ய வேண்டும்’ என்று மத்திய உளவுத்துறை அதிகாரி கூறியதாக தெரிகிறது.
பல இடங்களில் கேமரா பழுது
பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை தொடர்ந்து பராமரிப்பதோ, கண்காணிப்பதோ கிடையாது. பல இடங்களில் கேமராக்கள் பழுதாகி செயல்படாமல் உள்ளது. அசம்பாவிதம் எதுவும் நடக்கும் முன்பு போலீசார் விழித்துக் கொள்வது நல்லது.

No comments:

Post a Comment