‘கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமை கிடையாது’ என ஐகோர்ட் கிளையில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்களுக்கு முப்படை பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி, வக்கீல் பி.ஸ்டாலின் ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக மீனவர்களுக்கு கப்பற்படை உயர் அதிகாரி மேற்பார்வையில், கடலோர காவல் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமல்படுத்தப்படவில்லை. இதையடுத்து, மத்திய கேபினட் செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்பு செயலாளர், கடலோர காவல் படை துணை இயக்குனர் ஜெனரல், வெளியுறவு செயலாளர் ஆகியோர் மீது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி வக்கீல் ஸ்டாலின் மனுத்தாக்கல் செய்தார். அதற்கு மத்திய அரசு சார்பில் வெளியுறவுத்துறை இயக்குனர் தீபக்மித்தல், பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
இந்தியா & இலங்கை இடையே மன்னார் வளைகுடா, வங்காள விரிகுடா கடல் பகுதியில் கடல் எல்லை நிர்ணய ஒப்பந்தம் 1976ல் ஏற்பட்டது. மன்னார் வளைகுடாவில் 13வது கடல் மைலில் இந்தியா, இலங்கை, மாலத்தீவு நாடுகளின் கடல் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி, கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் ஓய்வு எடுக்கலாம், வலைகளை உலர்த்தலாம், அங்குள்ள அந்தோணியார் சர்ச் திருவிழாவில் கலந்து கொள்ளலாம். கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்களுக்கு மீன் பிடிக்க உரிமம் கிடையாது. கச்சத்தீவுக்கு செல்ல வழங்கப்பட்டுள்ள அனுமதியை, மீன் பிடி உரிமையாக தவறாக நினைத்து செயல்படுகின்றனர்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
பின்னர், மனு மீதான விசாரணை வரும் 11ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment