Saturday 7 January 2012

ஆசனவாயில் மறைத்து 1400 கிராம் தங்க பிஸ்கட்டுகள் கடத்தல் : அயன் படமா??

கொச்சி விமானநிலையத்தில் 1400 கிராம் எடையுள்ள 14 தங்க பிஸ்கட்டுகளை ஆசனவாயில் மறைத்து கடத்தி வந்த இலங்கை ஆசாமியை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
கொழும்பிலிருந்து நேற்று கொச்சி வந்த ஸ்ரீலங்கா ஏர்வேஸ் விமானத்தில் ஒருவர் தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வருவதாக கொச்சி வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமானம் கொச்சியில் தரை இறங்குவதற்கு முன்பே விமானநிலையத்தை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் முற்றுகையிட்டனர்.
விமானத்திலிருந்து இறங்கிய பயணிகள் அனைவரையும் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவரிடம் சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர். ஆனால் அவரிடம் தங்க பிஸ்கட்டுகள் எதுவும் சிக்கவில்லை. சோதனைக்கு அந்த நபர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஒத்துழைத்தார். பல மணிநேரம் சோதனை நடத்தியும் அந்த நபரிடமிருந்து எந்த கடத்தல் பொருளும் சிக்கவில்லை.
ஆனால் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு மிகவும் நம்பகமான இடத்திலிருந்து தகவல் கிடைத்திருந்ததால் அந்த வாலிபரை கூடுதல் பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவனைக்கு கொண்டுசென்றனர்.
மருத்துவமனையில் எக்ஸ்ரே பரிசோதனை நடத்தியபோது அந்த வாலிபரின் ஆசனவாயில் தங்க பிஸ்கட்டுகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை மருத்துவர்களின் உதவியுடன் வெளியே எடுத்தபோது மொத்தம் 14 தங்க பிஸ்கட்டுகள் இருந்தன. ஒவ்வொன்றும் தலா 100 கிராம் எடை கொண்டதாகும். மொத்த எடை 1400 கிராம்.
இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இந்த ஆசாமியின் பெயர் அல்தாப் சாகுல் அமீது (47). கேரளாவிலிருந்து கிராம்பு, ஏலக்காய் உட்பட நறுமணப் பொருட்களை இலங்கைக்கு கொண்டு செல்லும் இவர், அங்கிருந்து தங்க பிஸ்கட்டுகளை இந்தியாவுக்கு கடத்துவது வழக்கம்.
இதுவரை 13 முறை இவர் தங்க பிஸ்கட்டுகளை கடத்தியுள்ளார். விசாரணையில் சென்னையைச் சேர்ந்த ஒரு முக்கிய கடத்தல் புள்ளிக்காகவே தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வருவதாகவும், ஒரு முறைக்கு விமான டிக்கெட் போக 10,000 ரூபாய் தனக்கு கிடைக்கும் என்று அல்தாப் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
அல்தாப்பை தீவிர விசாரணைக்குப் பின் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.
சென்னையை சேர்ந்த முக்கிய கடத்தல் புள்ளிக்கும் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் வலைவீசியுள்ளனர்.

No comments:

Post a Comment