தூத்துக்குடி இஎஸ்ஐ மருத்துவமனை தலைமை டாக்டராக சேதுலட்சுமி பணியாற்றினார். தனியாக சுபம் மருத்துவமனை நடத்தி வந்தார். இவருடைய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் நித்யா மரணம் அடைந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நித்யாவின் கணவர் மகேஷ் நண்பர்களுடன் சென்று கடந்த 2ம் தேதி டாக்டர் சேதுலட்சுமியை வெட்டி கொலை செய்தார். இந்நிலையில் மகேஷ் தாயும், நித்யாவின் மாமியாருமான கனகலட்சுமி சென்னையில் நேற்று அளித்த பேட்டி:
என் மருமகள் நித்யா 5 மாத கர்ப்பிணியாக இருந்தாள். அவளின் கால்கள் வீக்கமாக இருந்ததால், சுபம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். டாக்டர் சேதுலட்சுமி பரிசோதனை செய்து பார்த்துவிட்டு, பிரஷர் அதிகமா இருக்கிறது. ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என்று கூறினார். அவர் கூறியபடி ரூ 10 ஆயிரம் பணம் செலுத்தினோம். அதன் பின், நித்யாவை பெட்டில் படுக்க வைத்தனர். நள்ளிரவு 2 மணிக்கு நர்ஸ் வந்து பரிசோதனை செய்து பார்த்தார். நித்யாவுக்கு பிரஷர் குறையவில்லை என்ற அவர், டாக்டரிடம் போனில் பேசிவிட்டு நித்யாவுக்கு 3 ஊசிகளை போட்டார். அதன்பிறகு, நித்யாவின் கண்கள் உள்ளே சென்றன.
நித்யாவுடன் மகேஷ்
நித்யா, "மூச்சுவிடவே மிகவும் கஷ்டமாக இருக்கிறது" என்று கூறி வாயை திறந்து திறந்து மூடினாள். இதை நர்சிடம் கூறினோம். மயக்க ஊசி போட்டால் அப்படித்தான் இருக்கும் என நர்ஸ் கோபமாக தெரிவித்தார். அதிகாலை 5 மணிக்கு ஆபரேஷன் செய்ய நித்யாவை டாக்டர் அழைத்து சென்றார். 8 மணிக்கு பிறகு வெளியே வந்த டாக்டர், நித்யாவின் நிலை மிகவும் மோசமாக உள்ளதால் வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறினார்.
உள்ளே சென்று பார்த்தபோது மருமகள் நிர்வாண நிலையில், வயிறு கிழிக்கப்பட்டு கிடந்தாள். வயிற்றில் தையல் கூட போடவில்லை. அவரை மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு தூக்கி சென்றோம். அங்கிருந்த டாக்டர்கள் பார்த்துவிட்டு, உங்கள் மருமகள் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறினார். ஏதோ தேவையில்லாத மருந்துகளை கொடுத்து என்னுடைய மருமகளையும், குழந்தையையும் டாக்டர் கொன்று விட்டார்.
இதனால், ஆத்திரம் அடைந்த என் மகன் டாக்டரை 2ம் தேதி கொலை செய்தான். அவன் 8 மாதம் தான் திருமண வாழ்க்கை வாழ்ந்தான். 6ம் தேதி மகனை ஜெயிலில் போய் பார்த்தோம். என் வாழ்க்கை முடிந்து விட்டது என்று அழுது கொண்டே கூறினான். நாங்கள் வறுமையில் வாழ்கிறோம். உதவுவதற்கு கூட யாரும் இல்லை. நாங்கள் எங்கே போவது. தமிழக முதல்வர்தான், என் மகனை மன்னித்து வெளியே விட வேண்டும் என்று கண்ணீர் விட்டு அழுதார். பேட்டியின் போது கனகலட்சுமி கணவர் ராஜபாண்டியன் உடனிருந்தார்.
பொதுநலன் காவலர்கள் நிறுவனத் தலைவர் டாக்டர் எம்.மீனாட்சி சுந்தரம் கூறுகையில், "மரணமடைந்த நித்யாவின் குடும்பத்திற்கு சுபம் மருத்துவமனை மற்றும் தமிழக சுகாதாரத்துறை இணைந்து ரூ 10 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும். நித்யாவின் மரணத்தின் உண்மையை அறிய நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். இந்த சம்பவத்தின் உண்மையை தமிழக முதல்வருக்கு மனுவாக கொடுத்துள்ளோம்” என்றார்.
தடை விதிக்க வேண்டும்
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை கிடைப்பதில்லை. 99 சதவீதம் அரசு டாக்டர்கள் வெளியில் பணியாற்றுகின்றனர். இதனால், சிகிச்சை பலனின்றி ஏராளமான நோயாளிகள் இறக்கின்றனர். மத்திய அரசில் பணி புரியும் டாக்டர்கள் வெளியில் பணியாற்ற கூடாது என்று சட்டம் உள்ளது. இதேபோல், அரசு டாக்டர்கள் தனியாக மருத்துவமனைகள், கிளினிக்குகள் நடத்துவதற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். அப்போதுதான் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை கிடைக்கும் என்றும் டாக்டர் மீனாட்சி சுந்தரம் கூறினார்.
No comments:
Post a Comment