Monday, 9 January 2012

குலசேகரம் அரசு மருத்துவமனையின் அவலம் : பாம்புகள் படையெடுப்பு; நோயாளிகளே காயத்துக்கு கட்டு போடுகின்றனர்

குலசேகரத்தை சுற்றியுள்ள ஏராள மான மலை கிராமங்களில் வாழும் மலைவாழ் மக்க ளின் உயிர்நாடியாக இருப் பது குலசேகரம் அரசு மருத்துவமனை. இதனை நம்பி நூற்றுக்கணக்கான நோயாளிகள் வருகின்றனர். இந்த மருத்துவமனையை தாலுகா மருத்துவமனை யாக தரம் உயர்த்த வேண்டுமென்று பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர்.
முதல்படம் மருத்துவமனை நுழைவு வாயில்
தாலுகா மருத்துவமனைக்குரிய அனைத்து வசதிகளும் இங்குள்ளது. ஆனால் நிர்வாக சீர்கேடுகளால் இம்மருத்துவமனை கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இங்கு 5 மருத்துவர்கள், 5 நர்ஸ், ஒரு துப்புரவு பணியாளர் உள்ளனர். இதில் ஒரே நாள் இரண்டு மருத்துவர், 2 நர்ஸ் பணியில் இருப்பது அபூர்வமாக உள்ளது. துப்புரவு பணியாளர்கள் போதிய அளவு இல்லாததால் துப்புரவு பணிகள் சரியாக நடைபெறுவதில்லை.
நர்ஸ்கள் குறைவாக இருப்பதால் காயங்களுடன் வரும் நோயாளிகள் தாங்களே கட்டு போடவேண்டிய நிலையுள்ளது. உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் பெட்சீட், தலையணை போன்றவை கிழிந்து கந்தையானதாகவும், சலவை செய்யப்படாமலும் வழங்கப்படுகிறது. இதனால் எளிதில் நோய் கிருமிகள் தொற்றி கொள்ளும் நிலையுள்ளது. ஆம்புலன்ஸ் வசதி உள்ளது என்று போர்டு மட்டும் தொங்குகிறது. ஆம்புலன்ஸ் நிறுத்துமிடமும் பல ஆண்டுகளாக காலியாக உள்ளது. ஜெனரேட்டர் வசதியுள்ளது. டீசல் பற்றாக்குறையினால் அது இயக்கப்படுவதில்லை.
திருவட்டார், குலசேகரம் காவல்நிலைய எல்கைகுட்பட்ட பகுதிகளில் அடி, தடியினால் காயம்படுபவர்கள் இங்கு சிகிச்சைக்கு அனுப்பப்படுகின்றனர். மருத்துவமனையில் காவலர்கள் இல்லாததால் மருத்துவமனைக்குள் புகுந்து பழிவாங்கும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெறுகிறது. வெளிநோயாளிகள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள கழிவறைகளை சுற்றிலும் புதர் வளர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது. இதேபோன்று மருத்துவமனை கட்டிடங்களை தவிர பிற பகுதிகள் முழுவதிலும் புதர் வளர்ந்து காணப்படுகிறது.
மருத்துவமனை பணியாளர்கள், மருத்துவர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வராததால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். இருக்கும் பணியாளர்கள் அடிக்கடி விடுமுறையில் சென்று விடுவதால் நோயாளிகள் திண்டாடி வருகின்றனர். மருத்துவமனை புனரமைப்பு பணிகள் மற்றும் புதிய கட்டிட வசதிகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ 52 லட்சம் நிதி பயன்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளதால் அந்த நிதி திரும்ப எடுத்து கொள்ளும் நிலையுள்ளது.
பயன்படுத்த முடியாத நிலையில் பூட்டப்பட்டு உள்ள கழிவறை.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடைபெற வேண்டிய நோயாளிகள் நலசங்க கூட்டம் நடைபெறாமல் உள்ளது. மருத்துவமனை சாலை வழியாக செல்ல வேண்டிய மினி பஸ்கள் அந்த வழியாக செல்வதில்லை. இதனால் நோயாளிகள் பஸ் நிறுத்தத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர்தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலையுள்ளது.
இவ்வாறு எல்லா வசதிகளுடன் தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட வேண்டிய குலசேகரம் அரசு மருத்துவமனை நிர்வாக சீர்கேடுகளால் சீரழிந்து வருகிறது.
நோயாளிகள் அவதி : இரவில் மருத்துவர்கள் இருப்பதில்லை
இது குறித்து நோயாளிகள் நல சங்கத்தை சேர்ந்த மணி கூறுகையில், ஏராளமான நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற வருகின்றனர். நோயாளிகள் வருகைகேற்ற மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை. இரவு நேரத்தில் மருத்துவர்கள் எவரும் பணியில் இருப்பதில்லை. இதனால் முழுநேர மருத்துவர்கள் நியமிக்கவேண்டும். உள்நோயாளிகளாக இருப்பவர்களுக்கு தரமான உணவு மற்றும் சுகாதாரமான போர்வைகள் வழங்க வேண்டும். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பு
குலசேகரம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கூடம் உள்ளது. ஆனால் அறுவை சிகிச்சைக்குரிய மருத்துவர்கள் இல்லாததால் அறுவை சிகிச்சைக்காக நோயாளிகள் காத்திருக்க வேண்டும். அல்லது பிற மருத்துவமனைகளை நாடி செல்லவேண்டும். தற்போது குடும்பகட்டுப்பாடு மற்றும் சில நோய்களுக்கான அறுவை சிகிச்சைக்காக பலர் காத்திருக்கின்றனர். மயக்க மருத்துவர் இல்லாததால் அறுவை சிகிச்சை நடைபெறாமல் பல நாட்களாக காத்திருக்கின்றனர்.
புதர் மண்டியுள்ளது
மருத்துவமனை வளாகத்தில் சூழ்ந்துள்ள புதர்கள்.
மருத்துவமனை வளாகம் புதர் மண்டி கிடப்பதால் அவ்வப்போது நச்சு பாம்புகள் மற்றும் விஷ ஜந்துகள் போன்றவை தலைகாட்டி செல்கிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலையுள்ளது. சுமார் 6 மாதங்களுக்கு முன் இதேபோன்று புதர் வளர்ந்திருந்ததை சமூக அமைப்பு ஒன்று அப்புறப்படுத்தியது. தற்போது அரசு கண்டு கொள்ளாததால் மீண்டும் புதர் மண்டியுள்ளது.

No comments:

Post a Comment