நாகர்கோவில் நகராட்சியில் அலைக்கழிக்கும் அதிகாரிகள்.
நாகர்கோவில் நகராட்சியில் பிறப்பு & இறப்பு சான்றிதழுக்கு 20 நாட்களுக்கு மேல் அதிகாரிகள் இழுத்தடிப்பதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
நாகர்கோவில் நகராட்சியில் பிறப்பு இறப்புகளை பதிவு செய்ய கிருஷ்ணன்கோயில், அண்ணா பஸ்நிலையம், வடசேரி பஸ்நிலையம், கோட்டார் கழுதை சந்தை, மயில்வாகனம் சோப் கம்பெனி தெரு, வட்டவிளை, கணபதி நகர், குருசடி, வாட்டர் டேங்க் ரோடு ஆகிய 14 இடங்களில் டிவிசன் அலுவலகங்கள் உள்ளன.
இந்த அலுவலகங்கள் மூலம் மருத்துவமனைகளில் நிகழும் பிறப்பு, இறப்புகள் நகராட்சி ஆவணங்களில் பதியப்படுகின்றன. இந்த சான்றுகளை நகராட்சி அலுவலகத்தில் உள்ள சேவை மையத்தில் அரசு வேலை நாட்களில் காலை 10 &1, மதியம் 2 & 430 மணிவரை கட்டணம் செலுத்தி 3 நாட்களில் பெறலாம். இதற்காக விண்ணப்படிவம் ரூ. 2 வசூலிக்கப்படும். பின்னர் அதில் ரூ.2க்கான நீதிமன்ற வில்லை ஒட்டி ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.15 வீதம் செலுத்த வேண்டும்.
ஆனால் தற்போது நீதிமன்ற வில்லை ஒட்டிய விண்ணப்படிவத்திற்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. விண்ணப்பப் படிவங்களுக்கான பணத்தை செலுத்திய பின்னர் ஒரு வாரம் கழித்து வருமாறு அங்குள்ள ஊழியர்கள் கூறுகின்றனர். ஆனால் ஒரு வாரம் கழித்த பின்னர் அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே சான்று கிடைக்கும். சான்றிதழ் கிடைக்க குறைந்தது 20 நாட்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் சேவை மையத்தில் இன்று சான்று வரவில்லை. நாளை வாருங்கள் என தொடர்ந்து அலைக்கழிக்கின்றனர்.
இதனால் அவசர காரியங்களுக்கோ அல்லது வெளியூர் வாசிகள் என்றாலோ அடையும் அவஸ்தைக்கு அளவில்லை. இதனால் கவலை தோய்ந்த முகங்களுடன் நிற்பவர்களை குறிவைக்கும் ஊழியர்கள் அவர்களிடம் சான்றிதழ் உடன் வாங்கித்தர சற்று செலவாகும் எனக்கூறி தகுதிக்கேற்ப பல நூறுகளை பெற்றுக்கொண்டு அரை மணி நேரத்தில் சான்றிதழ்களை சம்மந்தப்பட்டவர்களின் கைகளில் தருகின்றனர்.
எனவே நகராட்சி உடனடியாக சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக்கோரிக்கை எழுந்துள்ளது.
இதுபற்றி நகராட்சி நகர்நல அலுவலர் (பொறுப்பு) தாணுப்பிள்ளை கூறியதாவது:
3 நாட்களில் பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்கப்படும். எனினும் 16 பேர் பணியாற்றிய இடத்தில் தற்போது 5 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் சில நேரங்களில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம். விண்ணப்ப படிவத்திற்கு கட்டணமாக ரூ.2 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ரூ.10 வசூலிக்கப்படவில்லை. கூடுதலாக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் என்றார்.
No comments:
Post a Comment