கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து போராட்டக் குழுவினர் சார்பில் கூட்டப்புளியில் கருப்பு கொடி ஏந்தி நேற்று கண்டன ஊர்வலம் நடந்தது. 143 பேர் மொட்டை அடித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூடக்கோரி அணுஉலை எதிர்ப்பு இயக்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை கூட்டப்புளி விலக்கு பகுதியில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடி அங்கிருந்து கருப்பு கொடி ஏந்தி ஊர்வலமாக கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் உள்ள விஸ்வநாதபுரம் விலக்கு வரை சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உள்பட 143 பேர் மொட்டை அடித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதனால் நெல்லை, கன்னியமாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களிலிருந்து மீனவர்கள் யாரும் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இடிந்தகரை, கூடங்குளம் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆர்ப்பாட்டத்தில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் பேசியதாவது:
காங்கிரஸ் அரசு அணுஉலை என்ற பெயரில் மக்களை மொட்டை அடிக்கிறது.தொடர்ந்து நடைபெறும் ஊழல்களை மறைக்கவே காங்கிரஸ் போராடி வருகிறது. மத்திய அரசு அமைத்துள்ள குழுவானது நம்மிடையே கருத்துக்களை கேட்காமல், மக்களை சந்திக்காமலேயே அவர்களாகவே பிரச்னை முடிந்து விட்டதாக கூறுகின்றனர். இந்நிலையில் மாநில அரசானது நேற்று ஒரு குழுவை அமைத்துள்ளது. அந்த குழு நம்மிடையே ஒரு சில நாட்களில் வந்து நேரிடையாகவே அணுஉலை பாதுகாப்பு குறித்த கருத்துக்களை கேட்க உள்ளது.
இந்து முன்னணியில் உள்ள இந்துக்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்ல. காங்கிரஸ்காரர்களின் தூண்டுதல்களால் செயல்பட்ட ஒரு சிலர்தான் நம்மை தாக்கி உள்ளனர். இதனால் நம்மிடையே உள்ள ஒற்றுமையை சீர்குலைக்க காங்கிரஸ் அரசு போராடி வருகிறது. இதற்கு நாம் செவி சாய்க்கக்கூடாது. மேலும் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு உதயகுமார் பேசினார்.
No comments:
Post a Comment