விடுமுறை கேட்டும் கொடுக்காததால், ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் , இன்ஸ்பெக்டருடன் கட்டிபுரண்டு சண்டை போட்டார். இந்த சம்பவம் கொல்லங்கோடு காவலர் குடியிருப்பில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு மணல், ரேஷன் அரிசி ஆகியவற்றின் கடத்தலை தடுக்க 30க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சோதனை சாவடிகளில் உள்ளூர் போலீசாருடன், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கொல்லங்கோடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சோதனை சாவடியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12ம் அணியை சேர்ந்த காவலர்கள் இன்ஸ்பெக்டர் ஹரிகரன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கொல்லங்கோட்டில் உள்ள காவலர் குடியிருப்பில் தங்கி இருக்கிறார்கள். தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீஸ்காரர் அருணாசலம் (23). இவரும் சோதனை சாவடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளார். கொல்லங்கோடு காவலர் குடியிருப்பில் தங்கி இருக்கிறார். இவர் கடந்த மாதம் விடுமுறை கேட்டுள்ளார். ஆனால் இன்ஸ்பெக்டர் ஹரிகரன் விடுமுறைக்கு அனுமதி கொடுக்க வில்லை என கூறப்படுகிறது. இதனால் ஹரிகரன் மீது அருணாசலம் ஆத்திரம் அடைந்து தகராறு செய்தார்.
காவலர் குடியிருப்பில் வைத்தே இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கட்டி புரண்டு சண்டை போட்டனர். இருவரும் மாறி, மாறி சாதி பெயர்களை கூறியும் திட்டி இருக்கிறார்கள். மற்ற போலீஸ்காரர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்ததாக குழித்துறை அரசு மருத்துவமனையில் அருணாசலம் அனுமதிக்கப்பட்டார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஹரிகரன் சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக இருவருமே மாறி, மாறி கொல்லங்கோடு போலீசில் புகார் அளித்து இருந்தனர். உயர் அதிகாரிகள் உத்தரவின் படி போலீசார் விசாரணை நடத்தி, தற்போது இருவரின் புகாரின் பேரிலும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்துள்ளனர். (Tamil Murasu)
No comments:
Post a Comment