கொல்லம் நீண்டகரையில் இருந்து டான் என்ற மீன்பிடி படகு நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றது. இந்த படகில் அதே பகுதியை சேர்ந்த ஜஸ்டின், சேவியர், மைக்கேல், ஜோசப், கிளீட்டஸ், பேபிச்சன், சந்தோஷ் ஆகியோர் இருந்தனர்.
நேற்று அதிகாலை 1 மணி அளவில் இந்த படகு ஆலப்புழா அருகே உள்ள மனக்காடு கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழி யாக சென்ற சரக்கு கப்பல் படகு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் படகு உடைந்து நீரில் மூழ்கியது. படகில் இருந்த 7 மீனவர்களும் கடலுக்குள் விழுந்தனர். இதை பார்த்து அருகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த விசைப்படகு மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் மைக்கேல், ஜோசப் ஆகியோரை உயிருடன் மீட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின் ஜஸ்டின், சேவியர் ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டன. மற்ற 3 பேரை நீண்ட நேரம் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து காயமடைந்த மைக்கேல், ஜோசப் ஆகியோர் அவசரமாக ஒரு படகில் ஏற்றி கரைக்கு கொண்டு செல்லப்பட்டு ஆலப்புழா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஜஸ்டின் மற்றும் சேவியரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஆலப்புழா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கொச்சி கடல்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படையை சேர்ந்த 3 கப்பல்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் மீன்பிடி படகில் மோதிவிட்டு தப்பி சென்ற மர்ம கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை வரை அந்த கப்பலை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே கடலில் மூழ்கிய 3 மீனவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் நீண்டகரை பகுதியில் இத்தாலி சரக்குகப்பலில் இருந்த கடற்படை வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 மீனவர்கள் பலியாகினர். அந்த பரபரப்பு அடங்கும் முன் மற்றொரு கப்பல் மோதி படகில் சென்ற 2 மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் கேரள மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து இன்று ஆலப்புழா மற்றும் கொல்லம் பகுதியில் மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
No comments:
Post a Comment