Thursday, 1 March 2012

சிறையில் விளையும் காய்கறிகள் : கலக்கும் புழல் மத்திய சிறை

புழல் மத்திய சிறையில் 10 ஏக்கர் பரப்பில் கைதிகளே விவசாயம் செய்கின்றனர். இதில் தற்போது ரூ 5 லட்சம் மதிப்புள்ள 2 டன் காய்கறிகள் விளைந்துள்ளன.
சென்னை புழல் மத்திய சிறையில் பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் கைதிகளுக்கு அவரவர் கல்வித்தகுதிகளுக்கு ஏற்ப பணி வாய்ப்புகள் வழங்கப்படுவது வழக்கம். ஸ்கில்டு லேபர், செமி ஸ்கில்டு லேபர், அன் ஸ்கில்டு லேபர் போன்ற நிலைகளில் பணிகள் வழங்கப்படும். அதற்கேற்ப ஊதியமும் வழங்கப்படும். எந்த தகுதியும் இல்லாதவர்கள், படிப்பறிவு இல்லாதவர்கள் பொது பராமரிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இந்நிலையில் சிறையை பூஞ்சோலையாக மாற்றும் முயற்சியில் சிறைத்துறை நிர்வாகம் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக கைதிகளை கொண்டு காய்கறி தோட்டம் அமைக்க முடிவெடுக்கப்பட்டு கடந்த ஆண்டு அரை ஏக்கர் நிலம் கைதிகளுக்கு ஒதுக்கப்பட்டது. அரை ஏக்கர் நிலத்தை கொத்தி சீர்படுத்திய கைதிகள் கத்தரி, பூசணி, தக்காளி, வெண்டை போன்ற பல்வேறு வகை காய்கறிகளை பயிரிட்டனர். இதன் வாயிலாக கடந்த ஆண்டு ரூ 60 ஆயிரம் மதிப்புள்ள காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டது.
காய்கறி உற்பத்தி சிறப்பாக உள்ளதை உணர்ந்த சிறைத்துறை நிர்வாகம் நடப்பாண்டில் 10 ஏக்கர் பரப்பளவை ஒதுக்கி, காய்கறிகளை பயிரிட அனுமதித்தது. அதன் அடிப்படையில் பிப்ரவரி மாதம் வரையான காலத்தில் ரூ 5 லட்சம் மதிப்புள்ள 2 டன் காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
புழல் சிறையில் காய்கறி உற்பத்தி குறித்து சிறைத்துறை ஏ.டி.ஜி.பி டோக்ரா கூறியதாவது:
ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறை வளாகம் என்ற பெயரை புழல் சிறை பெற்றுள்ளது. சிறை வளாகத்தில் நிறைய காலி இடங்கள் உள்ளன. இந்த இடங்களை சமன் செய்து காய்கறி மற்றும் தோட்டக்கலை பயிர்களை உற்பத்தி செய்ய கைதிகளை அறிவுறுத்தினோம். நிலம் ஒதுக்கப்பட்டது. காய்கறிகள், பழ வகைகள் உற்பத்தி பெருகியுள்ளது. வருங்காலத்தில் சிறையில் உற்பத்தியாகும் காய்கறிகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சென்னை மாநகரின் 10 முக்கிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சிறைத்துறை வாகனங்களில் இந்த காய்கறிகள் எடுத்துச்செல்லப்பட்டு பொதுமக்களுக்கு, மற்ற மார்க்கெட்டுகளில் கிடைக்கும் விலையை விட குறைவான விலையில் விற்பனை செய்ய உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment