Thursday 1 March 2012

ஜெர்மன் நபரை திருப்பிஅனுப்பி யது ஏன்? நாகர்கோவில் எஸ்.பி. பேட்டி


குமரி மாவட்ட எஸ்.பி. பிரவேஷ் குமார் நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:
குமரி மாவட்டத்தில் ஆள் இல்லாத வீடுகளில் கொள்ளை மற்றும் செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீஸ் ரோந்து பணியில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இரவு வேளையில் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்கள் ரோந்து பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டு இருக்கிறது. குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். நாகர்கோவிலில் தங்கியிருக்கும் வட மாநில வாலிபர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் நடந்த கலைவாணி கொலை வழக்கில் முக்கிய தடயம் கிடைத்துள்ளது. விரைவில் கொலையாளி கைது செய்யப்படுவார். நகைக்காக தான் கலை வாணி கொலை செய்யப்பட்டுள்ளார். பலாத்காரம் எதுவும் செய்யப்படவில்லை. நாகர்கோவில் லாட்ஜில் தங்கியிருந்த ஜெர்மன் நபர் சட்ட விரோதமாக தங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததன் பேரில் அவரை கைது செய்து சென்னை கொண்டு சென்றனர். மற்ற படி எந்த தகவலும் குமரி மாவட்ட போலீசாருக்கு தெரிவிக்கப்பட வில்லை. வனத்துறை ஊழியர் ஆறுமுகம் மற்றும் யோகீஸ்வரி கொலை வழக்கில் தற்போது முண்டக்கண் மோகனிடம் போலீஸ் காவலில் விசா ரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கில் சுமார் 10 பேர் வரை ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். தொடர்ந்து மற்றவர்களை தேடி வருகிறோம். தற்போது சகாயத்தை காவலில் எடுத்து விசாரிக்கும் திட்டம் எதுவும் இல்லை. தேவைப்பட்டால் காவலில் எடுப்பது குறித்து முடிவு செய்வோம். சகாயத்தின் வீட்டில் பணம் எதுவும் கைப்பற்றப்பட வில்லை.
நேசமணி நகரில் நடந்த டிவி மெக்கானிக் அருள்தாஸ் கொலை வழக்கிலும் தடயங்கள் சிக்கியிருக்கிறது. அதன் அடிப்படையில் விசாரணை தொடர்ந்து நடக்கிறது. கொள்ளையர்களை பிடிக்கவும், கொள்ளைகளை தடுக்கவும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம். கடந்த ஆண்டு 150 கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த ஆண்டு கடந்த 2 மாதங்களில் மொத்தம் 30 கொள்ளைகள் நடந்துள்ளன. இதில் ஒரு சில சம்பவங்களை தவிர மற்றவைகளில் துப்பு துலங்கியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Post a Comment