Tuesday, 28 February 2012

குளச்சல் (குமரி) மீனவர்கள் 7 பேர் மாயம் : கலெக்டரை சந்தித்து மனு

திருச்செந்தூர் அருகே ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் 7 பேர் 15 நாட்களாகியும் கரை திரும்பாததால் மீனவ கிராமங்களில் பதட்டம் நிலவுகிறது. உறவினர்கள், பங்குதந்தையர் நேற்று கலெக்டரை சந்தித்து காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து தரகேட்டு மனு கொடுத்தனர்.
குளச்சலை சேர்ந்தவர் ராயப்பன் மகன் மரிய மிக்கேல் (34). இவரது "ரோகித்" என்ற விசைப்படகில் மரிய மிக்கேல், கனிஸ்டன்(27), வர்க்கீஸ் (42), மணக்குடி இம்மானுவேல் (28), ஜான்சன்(42), அந்தோணி ரூபன்(20), சைமன்காலனி அந்தோணிராஜ்(28) ஆகிய 7 மீனவர்கள் கடந்த பிப்ரவரி 12ம் தேதி குளச்சலில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். கடந்த 23ம் தேதி இம்மீனவர்கள் தொழில் முடிந்து கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால் நேற்று வரை அவர்கள் கரை திரும்பவில்லை.
மேலும் மீனவர்கள் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் தரப்பில் கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி மைய இயக்குநர் கிளீட்டஸ், சைமன்காலனி பங்குதந்தை அந்தோணியப்பன், அதிமுக மீனவர் அணி செயலாளர் சேவியர் மனோகரன் உள்ளிட்டோர் நேற்று குமரி மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். அப்போது மீனவர் அந்தோணிராஜின் தாயார் மெல்கிரிட்மேரி கண்ணீர் விட்டு கதறினார். மீனவர்களை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக் டர் நாகராஜன் உறுதியளித்தார். மெல்கிரிட் மேரி கூறுகையில், "எனது கணவர் கேரளாவில் தொழில் செய்து வருகிறார். எனது ஒரே மகன் அந்தோணிராஜ். திருச்செந்தூர் பகுதிக்கு மீன்பிடிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றான். வியாழக்கிழமை இரவு அல்லது வெள்ளிக்கிழமை காலை வந்துவிடுவதாக கூறினான். ஆனால் இதுவரை வரவில்லை. இதனால் நாங்கள் மிகவும் வேதனைப்படுகிறோம். அரசு ஹெலிகாப்டர் உதவியுடன் மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி மைய இயக்குநர் கிளீட்டஸ் கூறுகையில், "குளச்சலில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை. காணாமல் போன 7 மீனவர்களையும் கண்டுபிடிக்க மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே மீன்துறை அலுவலர்களிடம் மனு அளிக்கப் பட்டுள்ளது" என்றார்.
இதற்கிடையே காணாமல் போன மீனவர் களை கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பல் மற்றும் ஹெலிகாப் டர்கள் மூலம் நேற்று திருச்செந்தூர், மணப்பாறை கடல்பகுதியில் தேடும்பணி நடைபெற்றது. இருப்பினும் விசைப்படகு குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment