Tuesday, 28 February 2012

அம்மா!!! தாயே!!! கல்வி பிச்சை ஆர்ப்பாட்டம் : அரசு கவனிக்குமா???

ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி முன்பு நேற்று மாணவிகள் தட்டு ஏந்தி, கல்வி பிச்சை கேட்கும் போராட்டத்தை நடத்தினர்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாரில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி உள்ளது. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை மத்திய அரசு திடீரென ரத்து செய்தது. ஆனால் தமிழக அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, மாணவர்கள் சேர்க்கைக்கான அனுமதியை பெற்றது. அதன்படி மாணவர்கள் சேர்க்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை வகுப்புகள் தொடங்கவில்லை.
போதிய அடிப்படை வசதிகள், பேராசிரியர்கள் இல்லாததால் வகுப்புகள் தொடங்குவதற்கான அனுமதி வழங்கவில்லை என மத்திய அரசு கூறி உள்ளது. இதையடுத்து வகுப்புகளை தொடங்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை வலியுறுத்தி மாணவ, மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 7வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. இதில் 15க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின் ஒரு கட்டமாக நேற்று பகல் 12 மணியளவில் திடீரென மாணவிகள் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியின் நுழைவு வாயில் அருகே வந்தனர். அனைவரின் கைகளிலும் தட்டு வைத்திருந்தனர். அந்த தட்டில் கல்வி பிச்சை தாருங்கள் என எழுதி இருந்தனர். பின்னர் தட்டை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து மாணவிகள் கூறுகையில், “எங்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி இருக்கிறது. 1 வருட படிப்பு பாழாய் போகும் நிலை உள்ளது. எனவே அரசு உடனடியாக போர்க்கால நடவடிக்கை மூலம் மத்திய அரசு கூறியபடி அடிப்படை வசதிகள் மற்றும் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்பி வகுப்புகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு கல்வி பிச்சை அளிக்க வேண்டும். அதற்காகவே இந்த போராட்டம்“ என்றனர். 

1 comment:

  1. Why these govt are least bothered about the basic rights of people and want to be developed??? Wonder...

    ReplyDelete