கடந்த மாதம் பிப்ரவரி 13-ம் தேதி. கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து 11 மீனவர்களுடன் வழக்கம்போல ஒரு மீன்பிடிப் படகு கடலுக்கு சென்றது. குமரி மாவட்டம் பூத்துறையைச் சேர்ந்த பிரெடி என்பவருக்கு சொந்தமான "செயின்ட் ஆன்டனீஸ்" என்ற இந்தப் படகில் இரயுமன்துறையைச் சேர்ந்த அஜீஷ் பிங்கு, கொல்லத்தை சேர்ந்த ஜெலஸ்டின் உட்பட 11 பேர் இருந்தனர். 15ம் தேதி கரைக்கு திரும்ப திட்டம். ஆனால் அன்று மாலை 4.30 மணியளவில் படகில் இருந்த ஜெலஸ்டின் மற்றும் அஜீஷ் ஆகியோர் இத்தாலி கப்பல் வீரர்களால் சுடப்பட்டனர்.
தகவல் கிடைத்ததும் கொச்சியிலிருந்து கடற்படை ஹெலிகாப்டர் மற்றும் ரோந்து கப்பல் விரைந்து சென்று தப்பிச்செல்ல முயன்ற "என்ட்ரிகா லெக்ஸி" என்ற இத்தாலி எண்ணை சரக்கு கப்பலை மடக்கிப் பிடித்து கொச்சிக்கு கொண்டு வந்தது. இறந்த மீனவர்களின் உடல்கள் இரவோடு இரவாக கொல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு மறுநாள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ஜெலஸ்டினின் நெஞ்சிலும், பிங்குவின் நெற்றியிலும் குண்டுக்காயங்கள் இருந்தன.
கடற்கொள்ளையர்கள் என்று நினைத்துத்தான் மீனவர்களை சுட்டோம் என்று கூறி எளிதில் தப்பி விடலாம் என்று இத்தாலி கப்பலில் இருந்தவர்கள் கருதினார்கள். ஆனால் கொல்லம் போலீசார் இத்தாலி கப்பல் ஊழியர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். கொச்சி நகர போலீஸ் கமிஷனரான எம்.ஆர். அஜித்குமாரின் நடவடிக்கை காரணமாக மீனவர்களை சுட்ட லஸ்தோரே மாஸி மிலியானோ, சால்வத்தோரே ஜிரோண் என்ற 2 கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டனர். இத்தாலி நாட்டு வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஸ்டபான் டி மிஸ்துரா தலைமையில் இத்தாலி அதிகாரிகள் இந்தியாவிற்கு விரைந்து வந்து மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பிரணீத் கவுர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். சர்வதேச கடல் எல்லையில் தான் சம்பவம் நடந்துள்ளது என்றும், எனவே இந்தியாவில் நடைபெறும் விசாரணைக்கு ஒத்துழைக்க முடியாது என்றும் இத்தாலி அமைச்சர் மிஸ்துரா கூறினார். ஆனால் மத்திய அரசு அதை ஏற்கவில்லை.
இது ஒருபுறமிருக்க இந்திய மீனவர்களை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டது யார் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. சில வருடங்களுக்கு முன் உலகம் முழுவதும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தபோது ராணுவத்திற்கான செலவைக் குறைக்கவேண்டும் என்று இத்தாலி உட்பட ஐரோப்பிய நாடுகள் தீர்மானித்தன. இதனால் சரக்கு கப்பல்களுக்கு பாதுகாப்பு கொடுத்து அதற்காக கப்பல் நிறுவனங்களிடமிருந்து அதிக அளவில் பணம் வாங்குவது என்று தீர்மானித்தன. இதன் பிறகு தான் இத்தாலி கடற்படை அந்நாட்டு சரக்கு கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்க தீர்மானித்தது. பெரிய சரக்கு கப்பல்களில் "மரீன்கள்" என அழைக்கப்படும் 6 பாதுகாவலர்கள் அடங்கிய படைக்கு சப் லெப்டினன்ட் அந்தஸ்திலுள்ள அதிகாரி தான் தலைமை தாங்குவார். கடற்கொள்ளையர்களால் ஆபத்து ஏற்பட்டால் இத்தாலி நாட்டு ராணுவ சட்டத்தின்படி கொள்ளையர்களை நோக்கி சுடுவதற்கு கப்பலில் உள்ள சப் லெப்டினன்ட் தான் உத்தரவிடவேண்டும். ஆனால் இந்திய மீனவர்களை இத்தாலி வீரர்கள் சுடும்போது இந்த சப் லெப்டினன்ட் கப்பலில் இல்லை. தற்போது கைது செய்யப்பட்டுள்ள 2 வீரர்கள் தான் உண்மையிலேயே மீனவர்களை சுட்டார்களா என்பதையும் உறுதியாக கூறமுடியாது.
கடற்கரையிலிருந்து 33 நாட்டிகல் மைல் (59.4 கி.மீ.) தொலைவில் தான் சம்பவம் நடந்தது என்றும், இது இந்திய கடல் எல்லைக்கு வெளியே என்பதால் இந்திய சட்டப்படி வழக்கு பதிவு செய்ய முடியாது என்றும் இத்தாலி கூறுவது உண்மைக்கு புறம்பானது என்று இந்திய கடல்சார் பல்கலைக்கழக நிர்வாக கமிட்டி முன்னாள் உறுப்பினர் ஜோஸ் பால் கூறுகிறார். கடற்கரையிலிருந்து 200 நாட்டிகல் மைல் (360 கி.மீ.) வரை இந்தியாவுக்கு உரிமை உள்ள பகுதி என்பதால் இப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்றது தண்டனைக்குரிய குற்றமாகும் என்கிறார் அவர்.
No comments:
Post a Comment