Tuesday 28 February 2012

லட்சக்கணக்கில் கரை ஒதுங்கிய மீன்கள் : காரணம் என்ன???


காரைக்கால் கடற்கரையில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து கிடந்தது. இதனால் கடலில் ரசாயன கழிவு கலக்கப்பட்டதா என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
புதுவை மாநிலம் காரைக்கால் கடற்கரையில் நேற்று காலை 5 கி.மீ. தூரத்திற்கு லட்சக்கணக்கான மீன்கள் செத்து கரை ஒதுங்கி கிடந்தன. இதை பார்த்து அங்கு அதிகாலை நடைபயிற்சி செல்ல வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அரசின் தடையை மீறி சில மீனவர்கள் இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனர். இதில் சிக்கும் சிறிய மீன்களை மீண்டும் கடலில் தூக்கியெறிந்துவிடுவார்கள். அவ்வாறு தூக்கியெறியப்பட்ட மீன்கள் இறந்து இருக்கவேண்டும் அல்லது காரைக்கால் கப்பல் துறைமுகம் மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு வரும் கப்பல்களில் இருந்து கசிந்த ரசாயன கழிவுகளால் பாதிக்கப்பட்டு மீன்கள் இறந்து கரை ஒதுங்கி இருக்கலாம் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் இரவு முதல் இறந்த மீன்கள் கரை ஒதுங்கியுள்ளது. ஆனால், இவற்றை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கடற்கரையில் இருந்து 1 கிமீ தூரம் வரை உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள் அவதிக்குள்ளாகினர். மீன்கள் இறந்து கரை ஒதுங்கிய சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க கடலோர காவல்படை ரோந்துப்பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  (தினகரன்)

1 comment:

  1. It would be nice to have the source link of the news if you have got it from other web sources.

    ReplyDelete