Saturday 25 February 2012

என்ன நடக்குமோ?? அம்மன் வாக்களித்த தவத்தை கலைத்து விட்டனர்


தாராபுரத்தில் ஆண் வாரிசுக்காக, பூட்டிய வீட்டுக்குள் 3 நாளாக தவம் இருந்த பெண்ணை போலீசார் அதிரடியாக மீட்டனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் லட்சுமண நாராயணசாமி(40). மனைவி வள்ளிநாயகி(38). 2 மகள்கள் உள்ளனர். ஆண் வாரிசு இல்லாதது வள்ளிநாயகிக்கு கவலை அளித்தது. கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு விட்டதால், இனிமேல் குழந்தைக்கு வாய்ப்பில்லை என்ற கவலை, வள்ளிநாயகியிடம் இருந்துள்ளது. இந்நிலையில் தில்லாபுரி அம்மன் குழந்தை வரம் தருவதாக கூறியதாக சொல்லி, தன்னை வீட்டின் உள்ளே வைத்து பூட்டிவிடும்படி குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். அவர்களும் வள்ளிநாயகி விருப்பப்படி கடந்த 22ம் தேதி அதிகாலை 2 மணிக்கு, அவருக்கு மஞ்சள் ஆடை உடுத்தி, முகத்தில் மஞ்சள் பூசி, நெற்றியில் பெரிய அளவில் குங்குமம் வைத்து ஒரு சொம்பில் தண்ணீர் மட்டும் கொடுத்து, வீட்டினுள் அனுப்பி வெளியில் பூட்டி விட்டனர்.
3ம் நாளான நேற்று பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் தாராபுரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வள்ளிநாயகி வீட்டுக்கு சென்று கதவை திறக்கச்சொல்லி அவரை மீட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வீட்டை விட்டு வெளியில் வந்த வள்ளிநாயகி, ‘என் தவத்தை கலைத்தவர்களின் நிலை என்ன ஆகப்போகிறது, பாருங்கள்‘ என்று சாபம் விட்டார். இதனால் பொதுமக்களிடம் பீதி ஏற்பட்டுள்ளது.
வள்ளிநாயகியை மீட்ட போலீசார் கூறுகையில், “வள்ளிநாயகியை அவரது குடும்பத்தினர், அவரது பேச்சை நம்பி வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டனர். 4 நாள் ஆனதும் அவர்களுக்கும் பயம் வந்து விட்டது. இறந்து போனால் என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்தனர். எங்களுக்கு தகவல் கிடைத்ததும், தற்கொலையில் இருந்து அவரை காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தில் வள்ளிநாயகியை வெளியில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்றனர்.
வள்ளிநாயகி கூறுகையில், “தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையில் உள்ள தில்லாபுரி அம்மன் கோயிலுக்கு சென்று எனது குறையை சொல்லி வழிபட்டபோது. அம்மன் எனக்கு ஆண் குழந்தையைத் தருவதாக வாக்களித்தார். அதன் மூலம் தன்னை யார் என்று உலகுக்கு காட்டப்போகிறேன் என்றும் கூறினார். இதை ஏற்று கொண்டு, பூட்டிய வீட்டுக்குள் தனியே தவம் இருந்து வந்தேன். எனது தவத்தை கலைத்து விட்டனர். என்ன நடக்குமோ என்கிற பயம் இருந்து வருகிறது” என்றார்.

No comments:

Post a Comment