Saturday 25 February 2012

கோமா நிலைக்கு சென்றார் தொழிலாளி : போலி டாக்டர் கிளினிக் சீல்


தவறான சிகிச்சையால் கோமா நிலைக்கு சென்ற தொழிலாளியின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். அவரது கிளினிக் சீல் வைத்து மூடப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நாராயண நகரை சேர்ந்தவர் சண்முகம். சலவைத் தொழிலாளி. இவரது மனைவி சகுந்தலா. தறி நெசவுத் தொழிலாளி. கடந்த ஆண்டு இறுதியில் சண்முகத்துக்கு முகத்தில் கொப்பளம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, குமாரபாளையத்தில் உள்ள ஒரு கிளினிக்குக்கு சென்றுள்ளார். பாலசுப்பிரமணியம் என்பவர் சண்முகத்துக்கு ஊசி போட்டுள்ளார். வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் சண்முகத்துக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. முகத்தில் தடிப்பு வந்துள்ளது.
இதனால் மீண்டும் அந்த கிளினிக்குக்கு சென்றார். அப்போது, பாலசுப்பிரமணியம் வேறு ஒரு ஊசி போட்டுள்ளார். ஆனால், சண்முகத்துக்கு மேலும் மேலும் தடிப்பு, அரிப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர். தற்போது அவர், சுயநினைவு இழந்து கோமா நிலையில் உள்ளார்.
இது குறித்து சண்முகத்தின் மனைவி சகுந்தலா, குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்நிலையில், நேற்று காலை அந்த கிளினிக்குக்கு சென்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பாலசுப்பிரமணியம் டாக்டருக்கு முறையாக படிக்காமல் சிகிச்சை அளித்தது தெரிய வந்தது.
இதையடுத்து, பாலசுப்பிரமணியத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கிளினிக் மூடப்பட்டது. கிளினிக்கில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை போலீசார் பரிசோதனை செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment