Saturday, 3 March 2012

மீன்பிடி படகு மீது மோதியது சிங்கப்பூர் கப்பல் : உடனடியாக கொச்சி திரும்ப உத்தரவு


ஆலப்புழா அருகே மீன்பிடி படகு மீது மோதி விட்டு தப்பி சென்றது சிங்கப்பூர் சரக்கு கப்பல் என்று தெரியவந்துள்ளது. கோவா- சிங்கப்பூர் பாதையில் சென்றுகொண்டிருந்த இந்த கப்பலை உடனடியாக கொச்சி திரும்ப இந்திய கடற்படை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் நீண்டகரை கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற "டான்" என்ற படகு மீது ஆலப்புழா அருகே நேற்று முன்தினம் அதிகாலை அடையாளம் தெரியாத கப்பல் மோதியதில் கொல்லத்தைச் சேர்ந்த ஜஸ்டின் மற்றும் சேவியர் ஆகிய 2 மீனவர்கள் பரிதாபமாக இறந்தனர். 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். கிளீட்டஸ், பேபிச்சன் மற்றும் சந்தோஷ் ஆகிய 3 பேரை காணவில்லை.
சம்பவம் நடந்தது நள்ளிரவு நேரம் என்பதால் கப்பலை மீனவர்களால் சரியாக அடையாளம் காணமுடியவில்லை. மேலும் மீனவர்கள் படகு மீது மோதிய கப்பலை தேடும் பணி தாமதமாகத்தான் தொடங்கியது. இதனால் கப்பலை உடனடியாக பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
நடந்த அன்று அந்த வழியாக 13 கப்பல்கள் சென்றது தெரியவந்தது. தீவிர விசாரணைக்குப் பின் சிங்கப்பூர் கப்பல் ஒன்றை நேற்று மாலை கடற்படையினர் கோவா&சிங்கப்பூர் நீர் வழி சாலையில் வைத்து மடக்கினர். முதற்கட்ட விசாரணையில் மீனவர்கள் படகு மீது மோதியது அந்த கப்பல்தான் என்று தெரியவந்தது.
தொடர் விசாரணைக்காக அந்த கப்பல் கொச்சி துறைமுகத்திற்கு திருப்புமாறு கடற் படை வீரர்கள் உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து அந்த கப்பல் விசாரணைக்காக கொச்சி வந்துகொண்டிருக்கிறது. கொச்சியில் 2ம் கட்ட விசாரணை நடைபெறுகிறது.
மீனவர்கள் கதி என்ன?
இதற்கிடையே மாயமான மீனவர்களை தேடும் பணியில் நேற்று முன்தினம் காலை முதல் இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையைச் சேர்ந்த கப்பல்களும், ஹெலிகாப்டர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஆனால் இதுவரை மீனவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. தேடுதல் வேட்டையில் கொல்லம் பகுதியை சேர்ந்த ஏராளமான விசைப்படகு மீனவர்களும் ஈடுபட்டுள்ளனர். தவிர மீன்வளத்துறைக்கு சொந்தமான படகுகளும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.

No comments:

Post a Comment