Wednesday, 28 March 2012

"இன்று போய் நாளை வா" : படித்துவிட்டு ஏமாறும் ரத்த காட்டேரிகள்


ஆம்பூர் அடுத்த தேவலாபுரத்தில் ரத்த காட்டேரி பீதி காரணமாக வீடுகளில் ‘இன்று போய் நாளை வா’ என்ற வாசகத்துடன் சூலாயுதம் வரையப்பட்டுள்ளது. இதேபோல் பல வீடுகளிலும் உள்ளது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம், கம்மகிருஷ்ணபள்ளி, கரும்பூர், ராமசந்திராபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ரத்த காட்டேரி உலா வருவதாக பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
நேற்று மதியம் இந்த கிராமத்து பெண்கள் கூடியிருந்தபோது பெரும் புழுதியுடன் கூடிய காற்று அடித்துள்ளது. இதனால், வீட்டையொட்டி இருந்த தட்டுமுட்டு பொருட்கள் உள்ளிட்டவை பறந்தன. அப்போது அங்கிருந்த சிலருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டதாம். இதனை கண்டு அச்சமுற்ற பெண்கள் சிலர் ஊருக்குள் ஏதோ கெட்ட ஆவி வந்து விட்டதாக கூறியுள்ளனர்.
அதையடுத்து அப்பகுதியை சேர்ந்த குறி செல்லும் பெண்ணிடம் பொதுமக்கள் குறி கேட்டுள்ளனர். அதில் கிராமத்திற்குள் துஷ்ட ஆவிகள், பேய் மற்றும் பிசாசுகள், ரத்த காட்டேரி ஆகியவை வந்திருப்பதாகவும் அதை தடுப்பதற்கான பரிகாரத்தையும் அவர் தெரிவித்தாராம்.
இதனை தொடர்ந்து அப்பகுதியினர் தங்கள் வீட்டுக்குள் அவை புகுவதை தடுக்கும் வகையில் குங்குமத்தை தண்ணீரில் கலந்து நாமம் ஒன்றையும், சூலம் ஒன்றையும் தங்கள் வீட்டு சுவர்களில் வரைந்தனர். மேலும், அதில் ‘இன்று போய் நாளை வா’ என எழுதி உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், ‘ஊருக்குள் வரும் ரத்த காட்டேரி மற்றும் துஷ்ட ஆவிகள் இவற்றை படித்து விட்டு நாளை வரலாம் என்று எண்ணி சென்று விடுமாம். நாளை வந்தாலும் இதே வாசகம் இருப்பதால் அவைகள் ஏமாந்து விடும்’ என்றார்.
மேலும் இந்த பீதியால் இரவு 7 மணிக்கு மேல் பொதுமக்கள் நடமாட்டம் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் நடமாட்டம் இல்லை. இதனால், இரவு மற்றும் அதிகாலை ஷிப்டில் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்லும் ஆண்களுக்கு கயிறு கட்டியும், பூஜை செய்த எலுமிச்சை பழங்களையும் கிராம பெண்கள் கொடுத்து அனுப்புவதாக தெரிவித்தனர்.
ஆம்பூர் அடுத்த தேவலாபுரத்தில் ரத்த காட்டேரி பீதி காரணமாக வீடுகளில் ‘இன்று போய் நாளை வா’ என்ற வாசகத்துடன் சூலாயுதம் வரையப்பட்டுள்ளது. இதேபோல் பல வீடுகளிலும் உள்ளது.

No comments:

Post a Comment