Wednesday, 28 March 2012

ராணுவத்தின் தலைமை தளபதி பேசுவதை குறைக்க சொல்லும் அரசியல்வாதி

ராணுவத்தின் கண்ணியம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் அதன் தலைமை தளபதி பேச்சை குறைத்துக் கொள்ள வேண்டும் என சமாஜ்வாடி மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ் அறிவுறுத்தியுள்ளார்.

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக இருக்கும் வி.கே.சிங், பிறந்த தேதி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்த விவகாரத்தில் தலையிட சுப்ரீம் கோர்ட் மறுத்ததையடுத்து பெரும் தர்மசங்கடத்தில் இருந்து மத்திய அரசு தப்பியது. இந்த சர்ச்சை அடங்கிய நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையை சில தினங்களுக்கு முன்பு வி.கே.சிங் எழுப்பினார்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் ஓய்வு பெற்ற ராணுவ உயர் அதிகாரி ஒருவர், ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட ரூ.14 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம்சாட்டினார். இதற்கு டேப் ஆதாரம் இருப்பதாகவும் கூறினார். இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சிபிஐ அதிகாரிகள் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையில், இந்த பிரச்னை குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, லஞ்சப்புகார் குறித்து தன்னிடம் வி.கே.சிங் கூறியதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தளபதிக்கு தாம் ஆலோசனை கூறியதாகவும் விளக்கம் அளித்தார். வி.கே.சிங், அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அமைச்சர் கூறினார். இதற்கு வி.கே.சிங் இன்னும் பதில் அளிக்கவில்லை.
இந்நிலையில், ராணுவ தலைமை தளபதி பேச்சை குறைத்துக் கொள்ள வேண்டும் என சமாஜ்வாடி மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ராணுவ தளபதி மீது அனைவருக்கும் நம்பிக்கை உள்ளது. அதே நேரத்தில் அவர் அதிகம் பேசக்கூடாது. இதனால் ராணுவத்தின் நம்பகத்தன்மை, கண்ணியம் பாதிக்கப்படும். லஞ்சம் கொடுக்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வி.கே.சிங் தயங்கியிருந்தாலும், பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில் ஏ.கே.அந்தோணி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்” என்றார்.

No comments:

Post a Comment