குமரி வன பகுதியில் வயர்லெஸ் கருவிகள் செயல் இழந்துள்ளன. இதனால் பல தகவல்கள் மூடி மறைக்கப்படுகின்றன. எனவே இது குறித்து சிறப்பு குழு நியமித்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
குமரி மாவட்டத்தில் காடுகள் அழிக்கப்படுவதாலும், விளை நிலங்களாக மாறுவதாலும் இம் மாவட்டத்தின் தனித்தன்மை மாறி வருகிறது. இங்குள்ள காடுகளில் விலங்குகள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை நிலவுவதால், தமிழக அரசு வன உயிரின சரணாலயமாக அறிவித்துள்ளது. எனவே காடு களையும், அதில் உள்ள விலங்குகளையும் காப்பாற்ற தனிக்கவனம் செலுத்த வேண்டும். வன பாதுகாப்பு தொடர்பாகவும், தகவல்களை எளிதில் பரிமாறி கொள்ளவும், இங்குள்ள வன காவலர்களுக்கு வயர்லெஸ் கருவிகள் உள்ளிட்ட சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
வயர்லெஸ் கருவிகளின் இயக்க வசதிக்காக மாறா மலையில் வயர்லெஸ் டவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டவர் சூரிய ஒளி, மின் சக்தியால் இயங்கும் தன்மை உடையது. இந்த வயர்லெஸ் கருவியின் மூலம் காடுகளில் நடக்கும் மர கடத்தல், வேட்டையாடுதல், தீ வைத்தல் போன்ற சம்பவங்கள் குறித்த தகவல்கள் ஒரே நேரத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள வன அலுவலகங்களுக்கு தெரிந்து விடும். இதனால் ஒளிவுமறைவின்றி நடவடிக்கைகள் துரிதமாக நடக்கும் நிலை இருக்கும்.
இந்த நிலையில், அரசு வழங்கிய வயர்லெஸ் கருவி கள் பெரும்பாலானவை தற்போது செயல் இழந்த நிலையில் உள்ளன. இதை சரி செய்ய வனத்துறை நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை. இதனால் தகவல்கள் செல்போன்கள் மூலம் மட்டுமே பரிமாற்றம் செய்யப்படுகிறது. இதனால் பல தவறுகள் வெளிவராமல் மறைக்கப்படும் நிலை உள்ளது. இது ஒருபுறமிருக்க தற்போது செயல் பாட்டில் இருக்கும் வயர்லெஸ் கருவிகளையும் வனத்துறையினர் சரிவர பயன்படுத்துவதில்லை. வயர்லெஸில் தகவல்களை பரிமாற்றம் செய்தால், இருவருக்கு மட்டுமே தெரிய வேண்டிய விஷயம் மற்றவர்களுக்கும் தெரிந்து விடும் என்பதால், பெரும்பாலும் செல்போன் உரையாடல்களே அதிகம் உள் ளன. தற்போதைய காடுகளின் நிலை குறித்து ராகுல், கார்த்தி ப.சிதம்பரம் பொது தொழிலாளர் சங்க செயலாளர் குமரன் கூறியதாவது :
குமரி மாவட்டத்தில் காடுகளின் பரப் பளவு சுருங்கி வருகிறது. வன காவலர்கள் சிலர் பல இடங்களில் 100 ஏக்கர், 75 ஏக்கர், 50 ஏக்கர் என கைவசம் வைத்து கொண்டு ரப்பர் உள்ளிட்டவற்றை பயிர் செய்து அனுபவித்து வருகிறார்கள். சிற்றார் மலை பகுதியான பேணு பகுதியில் ஈட்டி மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு உள்ளது. இதே போல் காடுகளில் மண் அரிப்பு தடுப்பு சுவர் கட்டுவதற்கு முறையாக வெளியில் இருந்து கல் மற்றும் உபகரணங்கள் கொண்டு செல்ல வேண்டும்.
ஆனால் அப்படி கொண்டு செல்லாமல், கொண்டு சென்றதாக கணக்கு தயாரித்துள்ளனர். விலங்குகளுக்காக பல இடங்களில் காடுகளில் உள்ள நீரோடைகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட உத்தரவிடப்பட்டது. ஆனால் ஏற்கனவே உள்ள தடுப்பணைகளை சிறிய அளவிலான வேலைகள் மட்டும் செய்து விட்டு, புதிதாக கட்டியது போன்று கணக்கு காட்டி உள்ளனர். இது போன்ற பல முறைகேடுகள் நடந்துள்ளது. இது குறித்து முதலமைச்சர் தனிப்பிரிவு, வனத்துறை அமைச்சர் மற்றும் வன அதிகாரிகளிடம் புகார் கொடுத்து உள்ளோம். தனிக்குழு நியமித்து யார் தலையீடும் இல்லாமல் விசாரணை நடந்தால் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளி வரும். இவ்வாறு அவர் கூறினார்.
தீ விபத்து ஏற்பட்டால்..
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் கோடை வெயில் காரணமாக, அவ்வப்போது காடுகளில் தீ விபத்து ஏற்படும். காடுகளில் தீ விபத்து ஏற்பட்டால், இதை தடுக்க சிறப்பு பயிற்சிகள் பெற்றவர்களை இந்த 4 மாதங்களுக்கும் நியமிக்க வேண்டும். ஆனால் வனத்துறையில் இதை நடைமுறைப்படுவதில்லை. தீ கொளுந்து விட்டு எரியும் இடங்களுக்கு இரும்பு கம்பிகளை கொண்டு சென்று, அதனை வைத்து அடித்து தீயை அணைக்க வேண்டும். தற்போது இது நடைமுறைக்கு ஒவ்வாத முறையாக உள்ளது. நவீன கருவிகள் வந்த பிறகும் பழைய முறைகளையே வனத்துறையினர் பின்பற்றி வருகிறார்கள்.
கடந்த இரு நாட்களுக்கு முன், கோதையாறு பகுதியில் காடுகள் அழிக்கப்படுவதாக செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து வன உயர் அதிகாரிகள் , சம்பந்தப்பட்ட அலுவலர்களை அழைத்து விசாரணை நடத்தி உள்ளனர். இதில் விளக்கம் கூறிய அலுவலர்கள் , ஏற்கனவே 4 பேர் மீது வழக்கு போட்டுள்ளதாக கூறி இருக்கிறார்கள். இதற்கிடையே உயர்மட்ட வன அதிகாரிகளுக்கும் இந்த புகார் சென்று இருப்பதால், விரைவில் மண்டல அளவில் ஆய்வு குழு வர இருப்பதாக வன ஊழியர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment