Monday, 9 April 2012

பணம் சம்பாதிக்க கடல் கடந்து சென்றார் : தொலைந்தது வாழ்க்கை

18 ஆண்டாக சம்பளம், லீவு தராமல் சவுதியில் தமிழரை அடிமையாக்கி ஒட்டகம் மேய்க்க வைத்த கொடூரம்
சவுதியில் ஒட்டகம் மேய்க்கும் வேலைக்கு சென்ற தமிழர், தாய்நாடு திரும்ப முடியாமல் 18 ஆண்டுகளாக தவித்து வந்தார். உள்ளூர் போலீசாரின் தலையீட்டால் இப்போது நாடு திரும்ப உள்ளார். பல ஆண்டுகளாக எந்த தொடர்பும் இல்லாததால் குடும்பத்தினர் எங்கு இருக்கின்றனர் என்பது தெரியவில்லை. இதுபற்றியும் தூதரகம் விசாரித்து வருகிறது.
தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்கலமேடு தாலுகாவை சேர்ந்தவர் பி.பெரியசாமி (45). இவருக்கு 1993-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஓராண்டு கழிந்த நிலையில் 1994-ம் ஆண்டு சவுதி அரேபியாவில் வேலைக்கு சென்றார். ஒட்டகம் மேய்க்கும் வேலைதான் கிடைத்தது. ஹெய்ல் பகுதியில் ஒட்டகம் மேய்த்து வந்தார். ஆனால், பெரியசாமிக்கு சம்பளம் வழங்கவில்லை. கை நிறைய சம்பாதிக்கலாம் என்ற கனவில் வந்தவர், சொற்ப சம்பளம்கூட தரப்படாததால் அதிர்ச்சி அடைந்தார். இப்படியே பல மாதங்கள் கழிந்தன. ஊருக்கு சென்று எல்லாரையும் ஒருமுறை பார்த்துவர விரும்பி லீவு கேட்டார். அதுவும் மறுக்கப்பட்டது. விசா, பாஸ்போர்ட் உள்பட எல்லா ஆவணங்களையும் உரிமையாளர் பிடுங்கி வைத்து கொண்டார்.
பல ஆண்டுகள் கழிந்தும் அவருக்கு விடிவு காலம் பிறக்கவில்லை. மன உளைச்சல் காரணமாக தற்கொலைக்கும் முயன்றார். இவருடைய பரிதாப நிலையை அறிந்து நல்ல மனம் கொண்ட சவுதி நண்பர்கள் சிலர், பெரியசாமி தமிழ்நாடு திரும்ப உதவினர். அடிமை போல அவரை வேலைக்கு வைத்திருப்பது குறித்து முதலில் உள்ளூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பின், இது கவர்னரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, பெரியசாமியை வேலைக்கு நியமனம் செய்த உரிமையாளரை கைது செய்தனர். பெரியசாமிக்கு வழங்க வேண்டிய சம்பளம், விமான டிக்கெட் ஆகியவற்றை வழங்கவும் கவர்னர் உத்தரவிட்டார். பாஸ்போர்ட், விசா போன்ற எந்த ஆவணங்களும் இப்போது பெரியசாமியிடம் இல்லை. அதனால், எமர்ஜென்சி சர்டிபிகேட் வழங்க ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது அல் ஷாம்லி போலீசாரின் பாதுகாப்பில் உள்ள பெரியசாமி விரைவில் நாடு திரும்ப உள்ளார்.
பல ஆண்டுகளாக எந்த தொடர்பும் இல்லாததால், குடும்பத்தினர் தற்போது எங்கு, எந்த நிலைமையில் இருக்கின்றனர் என்பதும் அவருக்கு தெரியவில்லை. அவர்கள் பற்றியும் தூதரகம் விசாரித்து வருகிறது.

No comments:

Post a Comment