Wednesday 30 November 2011

தேங்காப்பட்டணத்தில் கடல் சீற்றம்

சாலை துண்டிப்பு: பஸ்கள் நிறுத்தம் : 50க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு
குமரி கடல் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம் முழுவதும் பலத்த மழை கொட்டியது. குமரி மாவட்டத்தில் கடல் சீற்றத்துடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் முடங்கிப்போய் உள்ளனர்.
நாகர்கோவிலில் நேற்று பிற்பகல் முதல் இரவு வரை கனமழை கொட்டியது. தேங்காப்பட்டணம் அருகே உள்ள முள்ளூர்துறை கடற்கரை கிராம பகுதியில் அரையான்தோப்பு என்ற இடத்தில் சுமார் 50 மீட்டர் தூரம் கடல் அரிப்பு தடுப்புசுவர் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் கடல் சீற்றம் ஏற்படும் போது அங்குள்ள 50& க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டு வருகிறது. அங்கு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று அந்த பகுதியினர் பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டு உள்ளனர்.
ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. கடந்த சில நாட்களாக ஏற்பட்ட கடல் சீற்றத்தால் அரையான்தோப்பு பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டது. நேற்று சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டன. அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் அந்த பாதையில் இயக்கப்படவில்லை. இந்த வழியாக பல கிராமங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. பல பஸ்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. முள்ளூர்துறை, ராமன்துறை, இனயம்புத்தன்துறை பகுதிகளுக்கு பஸ்கள் நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதிப்பட்டனர்.

No comments:

Post a Comment