Saturday 17 December 2011

வஜ்ரா மற்றும் கலவர தடுப்பு வாகனங்கள் தயார் : மின்உற்பத்தி தொடங்க கூடங்குளத்தில் தீவிரம்

ரஷ்யாவில் மன்மோகன் சிங் அறிவிப்பு எதிரொலி
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஓரிரு வாரங்களில் மின் உற்பத்தி தொடங்கும் என்று ரஷ்யாவில் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்ததை அடுத்து, மின் உற்பத்திக்கான நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. இதையொட்டி கூடங்குளம் பகுதி முழுவதும் போலீஸ் படை குவிக்கப்படுகிறது. மத்திய படையையும் வரவழைக்க ஏற்பாடு நடக்கிறது.
தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடன் ரூ.13 ஆயிரத்து 615 கோடி முதலீட்டில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட கூடங்குளம் முதல் அணு உலை இந்த மாதம் உற்பத்தியை தொடங்க இருந்தது. ஆனால் அணுமின் நிலையத்தை எதிர்த்து 3 மாதங்களுக்கு மேலாக அணு உலை எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தி வருவதால் மின்உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 3 நாள் பயணமாக 15ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்யா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் டிமிட்ரி மெத்வதேவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் பத்திரிகையாளர்களுக்கு இருவரும் கூட்டாக அளித்த பேட்டியின் போது பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், “கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல் அணு உலை இன்னும் சில வாரங்களில் செயல்பட தொடங்கும். 6 மாதங்களுக்கு பின்னர் கூடங்குளம் 2வது அணு உலை செயல்படும். உள்ளூரில் உள்ள பிரச்னைகள், பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக தீர்க்கப்படும்” என்று அறிவித்தார்.
இந்நிலையில், 3 நாள் பயணமாக 15ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்யா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் டிமிட்ரி மெத்வதேவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் பத்திரிகையாளர்களுக்கு இருவரும் கூட்டாக அளித்த பேட்டியின் போது பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், “கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல் அணு உலை இன்னும் சில வாரங்களில் செயல்பட தொடங்கும். 6 மாதங்களுக்கு பின்னர் கூடங்குளம் 2வது அணு உலை செயல்படும். உள்ளூரில் உள்ள பிரச்னைகள், பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக தீர்க்கப்படும்” என்று அறிவித்தார்.
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக, மக்களின் அச்சங்களை போக்க போராட்ட குழுவினருடன் மத்திய குழுவினர் நெல்லையில் 3 கட்ட பேச்சு நடத்தியும் முடிவு ஏற்படவில்லை. போராட்ட குழுவினர் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இருக்கின்றனர். இதையடுத்து, போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தி, மின் உற்பத்தியை திட்டமிட்டபடி தொடங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால்தான் பிரதமர் மன்மோகன் சிங், ரஷ்யாவில் இதற்கான அறிவிப்பை பகிரங்கமாக வெளியிட்டுள்ளார் என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
அதன்படி, மின் உற்பத்தி தொடங்குவதற்கு தீவிர ஏற்பாடுகள் நடக்கின்றன. போராட்டக்காரர்களை சமாளிக்க, இடிந்தகரை, கூடங்குளம் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைக்கும் வஜ்ரா மற்றும் கலவர தடுப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. அணு உலையை குண்டு வைத்து தகர்ப்போம் என மிரட்டல் விடுத்ததாக போராட்ட குழு தலைவர் உதயகுமார் மீது பயங்கரவாத தடை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு கிரிமினல் சட்ட திருத்தப் பிரிவில் பதிவு செய்யப்பட்டிருப்பதால், உதயகுமாரின் அமைப்பு பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் தடை செய்யப்பட வாய்ப்புள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால், இத்திட்டம் குறித்து மாநில அரசின் நிலை இன்னும் தெளிவாக்கப்படவில்லை. பிரதமரின் அறிவிப்பு குறித்து திமுக தலைவர் கருணாநிதி கூறுகையில், “பணிகள் தொடங்கும் என்று பிரதமர் கூறியிருக்கிறார் என்றால் அனைவரிடமும் ஆலோசித்த பின்தான் அப்படி சொல்லியிருக்க முடியும். அனைவரிடமும் பேசியிருந்தால் அந்த கருத்து வரவேற்கத்தக்கது” என்றார்.
கூடுதல் அணு உலைகளுக்காக ஒப்பந்தம் மேற்கொள்ள பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்யா சென்றுள்ளதை கண்டித்து கூடங்குளத்தில் 72 மணி நேர தொடர் உண்ணாவிரதத்தை போராட்ட குழுவினர் நேற்று தொடங்கினர். வீடுகளிலும், படகுகளிலும் கருப்பு கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆனால், ரஷ்ய அதிபர் மெத்வதேவுடன் கூடங்குளத்தில் 3வது மற்றும் 4வது அணு உலைகள் அமைப்பது பற்றி பிரதமர் மன்மோகன் பேசவில்லை. இதுகுறித்து இருநாட்டுக்கு இடையில் எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை.
ஆனால், 2 வாரங்களில் கூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடங்கும் என்று பிரதமர் அறிவிப்பைத் தொடர்ந்து அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்க இன்று மதியம் போராட்டக் குழுவினர் கூடங்குளத்தில் அவசர ஆலோசனை நடத்துகின்றனர்.

No comments:

Post a Comment