Saturday 17 December 2011

குளச்சல் : தீயணைப்பு துறையினர் இறங்க மறுத்தனர் : டிரைவர் வாலிபர் சடலத்தை மீட்டார்

குளச்சல் அருகே துர்நாற்றம் வீசிய பாழடைந்த கிணற்றில் மாயமான வாலிபர் சடலம்
குளச்சல் அருகே 4 நாட்களாக துர்நாற்றம் வீசிய பாழடைந்த கிணற்றில் இருந்து மாயமான வாலிபர் சடலமாக மீட்கப்பட்டார். தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்க முன்வராத நிலையில் கார் டிரைவர் துணிச்சலுடன் இறங்கி வாலிபர் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். 
குளச்சல் அருகே உதியாவிளை சானல்கரையை சேர்ந்தவர் செல்லையா. இவரது மகன் ராஜேஷ்(26). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 10ம் தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடினர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் இல்லை.
இந்நிலையில் ராஜே ஷின் வீட்டின் அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து 13ம் தேதி முதல் துர்நாற்றம் வீசியது. இதனால் மாயமான ராஜேஷ் கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டது. இதனையடுத்து ஊர் மக்கள் மின்விளக்கை கிணற்றில் இறக்கி பார்த்தனர். அந்த கிணறு 250 அடி ஆழம் கொண்டது என்பதால், சரியாக தெரிய வில்லை.
இது பற்றி குளச்சல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பிரபாகரன் சம்பவ இடம் வந்து, பைனாக்குலர் மூலம் கிணற்றில் பார்த்தார். அப்போது அங்கு மனித உடல் எதுவும் கிணற்றில் இருப்பதாக தெரியவில்லை என்று அவர் கூறினார். ஆனால் தொடர்ந்து கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது.
எனவே கிணற்றுக்குள் இறங்கி சடலம் ஏதேனும் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று குளச்சல் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திலும் அப்பகுதி மக்கள் முறையிட்டனர். போலீசாரும் தீயைணைப்பு துறையினரிடம், கிணற்றில் சடலம் இருக்கிறதா? என்பதை உறுதிசெய்ய வலியுறுத்தினர். ஆனால் தீயணைப்பு நிலையத்தினர் கிணற்றில் இறங்க முன்வரவில்லை. இதனால் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்தினருக்கும் புகைச்சல் ஏற்பட்டது.
இதுபற்றி கல்லுக்கூட்டம் பேரூராட்சி கவுன்சிலர் சம்பத்சந்திரா, கல்குளம் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து கலெக்டர் மற்றும் எஸ்.பி நடவடிக்கையின் பேரில் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் நேற்று சம்பவ இடம் வந்தனர். ஆனால் அவர்கள் கிணற்றுக்குள் இறங்க முன்வரவில்லை. இதனையடுத்து அந்த பகுதி பொதுமக்கள் கிணறு தோண்டும் தொழிலாளர்களை தேடி அலைந்தனர். அவர்களும் கிணற்றில் இறங்க முன்வரவில்லை.
இதனால் போலீசாரும் பொதுமக்களும் செய்வதறியாது தவித்தனர். இந்நிலையில் உடையார் விளையை சேர்ந்த கார் டிரைவர் ஆல்பர்ட்(43) என்பவர் கிணற்றுக்குள் இறங்க முன்வந்தார். இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் விஷவாயு இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள ஒரு மண்ணெண்ணெய் விளக்கை வாளியில் கட்டி கிணற்றில் இறக்கினர். அப்போது விஷவாயு இருப்பது தெரியவந்தது. அதனை தண்ணீர் பீச்சி அடித்து அவர்கள் வெளியேற்றினர்.
இதனைத்தொடர்ந்து ஆல்பர்ட்டை கயிறு கட்டி கிணற்றில் இறக்கினர். அப்போது மனித உடல் அழுகிய நிலையில் கிடப்பது தெரியவந்தது. அதனை சாக்கில் கட்டி கிணற்றில் இருந்து மீட்டனர். அது மாயமான ராஜேஷின் உடல் என்பதை அவரது உறவினர்கள் உறுதி செய்தனர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக குளச்சல் அரசு மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. மாயமான வாலிபர் 6 நாட்களுக்கு பிறகு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது பற்றி குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜேஷ் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
குளச்சல் அருகே உதியாவிளையில் பாழடைந்த கிணற்றில் சடலத்தை மீட்க தீயணைப்பு துறையினர் இறங்க மறுத்ததையடுத்து துணிச்சலுடன் கிணற்றில் இறங்கிய டிரைவர் ஆல்பர்ட்.
டிரைவருக்கு பாராட்டு
பாழடைந்த கிணற்றில் இருந்து கடந்த 4 நாட்களாக தொடர்ந்து துர்நாற்றம் வீசி வந்தது. கிணற்றில் இறங்க தீயணைப்பு படையினர் உட்பட யாருமே முன்வர வில்லை. ஆனால் டிரைவர் ஆல்பர்ட் துணிச்சலுடன் கிணற்றில் இறங்கி உடலை மீட்டு, கரைக்கு கொண்டு வந்தார். அவரது துணிச்சலை பொதுமக்கள் பாராட்டினர்.

No comments:

Post a Comment