மும்பையில் ஆதரவற்றோர் இல்லம் என்ற பெயரில் குழந்தைகளை விற்கும் கும்பல் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கும்பல் ரூ 2 லட்சம் முதல் ரூ 3 லட்சம் வரை குழந்தைகளை விற்கிறது.
குழந்தை இல்லாத தம்பதிகள் முதலில் அணுகுவது டாக்டர்களைதான். அதற்கென பல மருத்துவ முறைகள் இருந்தபோதும் சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பது இல்லை. ஒரு சில வசதி படைத்தோர் வாடகை தாயை அணுகுகிறார்கள். இதற்கு செலவு மிக அதிகம் என்பதால் பெரும்பாலானோர் குழந்தையை தத்து எடுக்க முடிவு செய்கிறார்கள். பெற்றோரின் வருமானம், சொத்து விவரம், படிப்பு உள்ளிட்ட பல விவரங்களை பரிசீலித்த பிறகே தத்து எடுக்க அனுமதி கிடைக்கும். அனுமதி கிடைத்தபிறகும் நீண்டநாட்கள் காத்திருக்க வேண்டும். பெரும்பாலானவர்களுக்கு பதிவு செய்த 2 ஆண்டுக்கு பிறகே குழந்தை கிடைக்கும்.
எல்லாவற்றுக்கும் குறுக்கு வழி உள்ள நம் நாட்டில், இதற்கென உடனடியாக குழந்தை கிடைக்க வழியில்லாமலா போய்விடும். உடனடி காபி, உடனடி இட்லி, துரித உணவு காலம் என்பதால் உடனடியாக குழந்தை கிடைக்கவும் வழி உள்ளது அம்பலமாகி உள்ளது. மும்பை புறநகர் பகுதியான உல்லாஸ் நகரில் குழந்தைகள் விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கென தனி கும்பல் செயல்பட்டுவருகிறது.
உல்லாஸ் நகரில் மாற்று திறனாளிகளுக்கான ஆதரவற்றோர் இல்லம் நடத்தும் கும்பல்தான் குழந்தைகள் விற்பனையிலும் ஈடுபட்டுள்ளது. ஆண் குழந்தை வேண்டுமா, பெண் குழந்தை வேண்டுமா என்பதுதான் அந்த கும்பலின் ஒரே கேள்வி. ஆண் குழந்தை என்றால் ரூ 2 முதல் ரூ 3 லட்சம் வரை விலை கொடுக்க வேண்டும். ஒரு வாரத்துக்குள் குழந்தை கிடைத்து விடுகிறது. கையோடு விலைக்கு வாங்கும் தம்பதிக்கு அந்த குழந்தை பிறந்ததாக பிறப்பு சான்றிதழும் தரப்படுகிறது. இப்படி, ரூ 2.30 லட்சம் கொடுத்து பிறந்து 6 நாளே ஆன ஆண் குழந்தையை யார் வேண்டுமானாலும் வாங்கிவிடலாம்.
இதற்காக ஏழை கூலித் தொழிலாளர்களிடம் இருந்து ஒரு சில ஆயிரங்களுக்கு குழந்தைகளை விலை கொடுத்து வாங்குகின்றனர். பணத்துக்கு ஆசைப்பட்டு அடுத்தடுத்து குழந்தை பெற்றுக் கொள்ளும் ஏழைகள் பலர் இருக்கின்றனர். ஆனால், ஒரு சில ஆயிரங்களுக்கு வாங்கும் குழந்தையை பல லட்சத்துக்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பணக்காரர்களுக்கு குழந்தைகளை இந்த கும்பல் விற்றுள்ளது.
இதுதவிர வாடகை தாயை பிடித்து கொடுக்கும் பணியையும் இந்த கும்பல் செய்துள்ளது. வழக்கமாக வாடகை தாய் என்றால் செயற்கை கருவூட்டல் முறை பின்பற்றப்படும். ஆனால், இவர்களோ, அந்த பெண்களுடன் ஆண்களை நேரடியாக உடலுறவு வைத்துக்கொள்ள உதவுகின்றனர். இதற்கு இவர்கள் வாங்கும் தொகை ரூ 10 லட்சம்.
குழந்தைகள் சட்டவிரோத விற்கப்படுவது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment