தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும் மார்ச் 1ம் தேதி முதல் இந்த மையம் செயல்பட உள்ளது. மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் ரெய்டு நடத்தவும், யாரை வேண்டுமானாலும் கைது செய்யவும் இந்த மையத்தின் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்களை கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட இந்த தன்னிச்சையான முடிவை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட 8 மாநில முதல்வர்கள் கோரியுள்ளனர்.
தீவிரவாத செயல்களை தடுக்க தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க மத்திய அரசு கடந்த 3ம் தேதி முடிவு செய்தது. தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பாக நாடு முழுவதும் இருந்து கிடைக்கும் தகவல்களை ஒருங்கிணைத்து ஆய்வு செய்யும் பணியை இந்த மையம் மேற்கொள்ளும். இதற்காக, தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் அனுமதி பெறாமல் ரெய்டு நடத்தவும், சந்தேகப்படுபவர்களை கைது செய்யவும் அந்த மையத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தேசிய மையம் மார்ச் 1ம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த திடீர் முடிவு, மாநிலங்களின் அதிகாரத்தில் தலையிடும் செயலாகும் என்று 8 மாநில முதல்வர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் தமிழகமுதல்வர் ஜெயலலிதா மற்றும் மம்தா பானர்ஜி (மேற்கு வங்காளம்), நரேந்திர மோடி(குஜராத்), நவீன் பட்நாயக்(ஒரிசா), நிதிஷ் குமார்(பீகார்), பிரகாஷ் சிங் பாதல்(பஞ்சாப்), சிவராஜ்சிங் சவுகான்(ம.பி), பிரேம்குமார் துமல் (இமாச்சல்) ஆகிய முதல்வர்களும் மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சட்டம் ஒழுங்கு பாதுகாப்பது மாநிலங்களின் கடமை. இது மாநிலங்களின் அதிகார வரம்புக்குள் வருகிறது. ஆனால், தலையிடும் வகையில் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் தொடங்க மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு செய்துள்ளது. மாநிலங்களின் ஆதரவை பெறாமல் இப்படி ஒரு முடிவை எடுத்தது சரியல்ல. இது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. சம்பந்தப்பட்ட மாநில அரசின் ஒப்புதல் பெறா மல், ரெய்டு நடத்தவும், கைது செய்யவும் தேசிய தீவிரவாத தடுப்பு மைய அதிகாரிகளுக்கு அதிகாரம் தருவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏற்கனவே மத்திய அமைச்சகங்கள் மாநிலங்களை கலந்து பேசாமல் ஆணவத்தோடு செயல்படுகின்றன. மாநிலங்களின் அதிகாரத்தில் மத்திய அரசு நேரடியாக தலையிடுவதை ஏற்க முடியாது. எனவே, தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தை அமைக்கும் முடிவை, மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது குறித்து மத்திய தொலைதொடர்புதுறை அமைச்சர் கபில் சிபல் கூறுகையில்,‘‘தீவிரவாத செயல்களால் நாடு முழுவதும் தினமும் அப்பாவி பொது மக்கள் கொல்லப்படுகின்றனர். தீவிரவாதிகளின் இந்த சவாலை தேசிய அளவில் சமாளிக்க வேண்டியது அவசியம். அதனால்தான், தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க அரசு முடிவு செய்தது’’ என்றார்.
No comments:
Post a Comment