மாறி வரும் சமூக சூழலை கருத்தில் கொண்டு ஓரினச் சேர்க்கை விவகாரத்தை பார்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஒரே பாலினத்தை சேர்ந்த இருவர் பரஸ்பர சம்மதத்துடன் பாலியல் உறவு கொள்வது சட்டப்படி குற்றமல்ல என்று டெல்லி உயர் நீதிமன்றம் 2009ம் ஆண்டு அளித்த தீர்ப்பு நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஒழுக்க நெறிமுறைகளுக்கும் கலாசாரத்துக்கும் ஓரினச் சேர்க்கை எதிரானது என்றும், சட்ட விரோதமானது என்றும் பா.ஜ. மூத்த தலைவர் பி.பி.சிங்கால், யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் பல அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்குகள் நீதிபதிகள் சிங்வி, முகோபாத்யாயா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஓரினச் சேர்க்கைக்கு எதிராக மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் அம்ரேந்திர சரண் வாதாடினார். அப்போது நீதிபதிகள் கூறுகையில், “1860ம் ஆண்டுக்கு முன்பே ஓரின சேர்க்கை குற்றமாக கருதப்படவில்லை. கஜுராஹோவில் உள்ள ஓவியங்களும் சிற்பங்களும் இதை காட்டுகின்றன” என்றனர். அதற்கு பதிலளித்த சரண், “சிற்பங்களை வைத்து சமூக பிரச்னைகளை முடிவு செய்யக் கூடாது” என்று வாதிட்டார்.
இதற்கு பதிலளித்து நீதிபதிகள் கூறியதாவது:
சிற்பங்களும் ஓவியங்களும் அந்த காலகட்டத்தை வெளிப்படுத்துகின்றன. ஓரினச் சேர்க்கையை வெறும் பாலியல் ரீதியான உறவாக மட்டுமே பார்க்கக் கூடாது. 20 ஆண்டுகளுக்கு முன் ஒழுக்கமற்றதாக கருதப்பட்டவைகளை சமூகம் இப்போது ஏற்றுக் கொள்கிறது. திருமணம் செய்து கொள்ளாமலே இருவர் சேர்ந்து வாழ்வது, செயற்கை முறையில் கருத்தரித்தல், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது போன்றவை 30 ஆண்டுகளுக்கு முன் இயற்கைக்கு முரணாக கருதப்பட்டது. இப்போது, செயற்கை முறையில் கருத்தரித்தல் வெற்றிகரமான வியாபாரமாக நடந்து வருகிறது. சமூகம் மாறிக் கொண்டு வருகிறது. மாறி வரும் சமூக சூழலை கருத்தில் கொண்டு ஓரினச் சேர்க்கை விவகாரத்தை பார்க்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர். வழக்கு விசாரணை இன்றும் தொடர்ந்து நடக்கிறது.
No comments:
Post a Comment