வேடசந்தூர் அருகே நிலவுக்கு மனைவியாக சிறுமியை பாவித்து கிராம மக்கள் விடிய விடிய திருவிழா கொண்டாடினர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தேவிநாயக்கன்பட்டி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் தை பௌர்ணமி திருவிழா வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை சிறுமிகள் பால் கொண்டுவந்து நிலவுக்கு படைத்தனர்.
தினமும் மாலை நேரங்களில் தங்களது வீட்டில் சமைக்கப்படும் விதவிதமான சாதங்களை மாசடச்சியம்மன் கோயிலுக்கு கொண்டு வந்தனர். பின் அதை மற்றவர்கள் கொண்டு வந்துள்ள சாதத்துடன் சேர்த்து கலக்கி ஒரு பகுதியை கோயில் முன்பு நிலவுக்கு படைத்து, அந்த சாதத்தில் விளக்கேற்றினர். பின் கலக்கப்பட்ட மற்ற சாதத்தை அனைவரும் பகிர்ந்து சாப்பிட்டனர். இதேபோல் 7 நாட்கள் கடைப்பிடிக்கப்பட்டது.
நேற்றிரவு 11 மணிக்கு நிலா பெண்ணாக (நிலவின் மனைவியாக) ஊர் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரியதர்ஷினியை(10), பெண்கள் ஊர் எல்லையில் உள்ள சரளிமலைக்கு அழைத்துச் சென்று அங்கு அமரவைத்தனர். பின் ஆவாரம் பூக்களை பறித்து மாலையாக தொடுத்து அவருக்கு அணிவித்தனர். பின் ஒரு கூடையில் ஆவாரம் பூக்களை வைத்து, அதை நிலா பெண் சுமந்து வர, ஊர்வலமாக தேவிநாயக்கன்பட்டி கோயிலுக்கு அழைத்து வரப்பட்டார்.
இதன்பின் மாசடச்சியம்மன் கோயிலில் பச்சை மட்டையால் குடிசை அமைத்து நிலா பெண் அமரவைக்கப்பட்டார். பின் ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து கோயில் முன்பு வைத்தனர். குடிசையில் இருந்த நிலா பெண்ணை மாவிளக்குகளுக்கு நடுவே அமரவைத்து பெண்கள் கும்மியடித்தனர்.
அதிகாலையில் நிலா மறையத் தொடங்கியதும் ஊர் மக்கள் நிலா பெண்ணை அழைத்துக் கொண்டு அருகிலுள்ள கிணற்றுக்கு சென்றனர். அந்த கிணற்றில் ஆவராம் பூக்களை கொட்டினர். பின் தண்ணீரில் குவியலாக மிதக்கும் பூக்கள் மீது மண் கலயத்தில் எண்ணெய் ஊற்றி தீபமேற்றிவிட்டு ஊர் திரும்பினர். இதில் நிலா பெண் ஏற்றிய விளக்கு 7 நாட்கள் அணையாமல் எரியும் என்பது ஐதீகம்.
விடிய விடிய நடந்த இந்த விநோத திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். (Tamil Murasu)
No comments:
Post a Comment