Thursday, 23 February 2012

பள்ளிகளில் புகார் பெட்டி : கல்வித்துறை அதிரடி உத்தரவு


அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, ஆசிரியர்களின் நடவடிக்கைகள் குறித்து வருத்தம் தெரிவித்தார்.
மேலும், மாணவர்களை ஆசிரியர்கள் தங்கள் சொந்த பிள்ளைகளைப் போல கருத வேண்டும் என்றும் தெரிவித்தார். தனியார் பள்ளியில் படித்த மாணவன் கொலை செய்த சம்பவம் போல் எந்த பள்ளிகளிலும் மாணவர்கள் ஈடுபடாமல் இருக்க தக்க அறிவுரைகளையும் அமைச்சர் வழங்கினார்.
இதை அடிப்படையாக கொண்டு கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் என்று 8 கட்டளைகளை பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ளார். இது அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
** தொடர்ந்து பள்ளிக்கு வராத மாணவர்கள் குறித்து அறிந்து தலைமை ஆசிரியர்கள் அந்த மாணவரின் பெற்றோரிடம் விசாரித்து அந்த மாணவரை திரும்ப பள்ளிக்கு வரவழைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
** மாணவர்களுக்கு அடிக்கடி நன்னெறி போதனைகள் சொல்லி நல்வழிப்படுத்த வேண்டும்.
** ஆசிரியர்கள், மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
** மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும். பெற்றோருக்கும் தெரிவிக்க வேண்டும்.
** மாணவர்களின் பிரச்னைகளை தீர்க்க இரண்டு ஆசிரியர்கள் கொண்ட குழுவை அமை த்து உளவியல் ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
** ஒவ்வொரு பள்ளியிலும் ஆலோசனைப் பெட்டி அல்லது புகார் பெட்டி வைக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் குறைகள், பிரச்னைகளை தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
** மாணவர்களிடம் ஆசிரியர்கள் பாரபட்சம் காட்டக்கூடாது. கற்றல் கற்பித்தல் செயலில் அனைவரையும் ஈடுபடுத்த வேண்டும்.
இவ்வாறு பள்ளி கல்வி துறை சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment