பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக இணையதளங்கள் பயன்படுத்துவோர் மத்தியில் சமீபகாலமாக வித்தியாசமான கலாசாரம் பரவ ஆரம்பித்திருக்கிறது. அதுபற்றிய விவரம்:
டெல்லி ஐ.டி. கம்பெனி ஊழியர் ஆதித்ய யாதவ். பேஸ்புக்கில் இவரது பெயரில் கணக்கு இருக்கிறது. தன் குடும்ப நிகழ்வுகள், சங்கடங்கள், பிரச்னைகளை வழக்கம்போல பேஸ்புக்கில் பகிர்ந்துகொள்கிறார். இதில் என்ன ஆச்சரியம் தெரியுமா? ஆதித்யா இறந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிறது.
ஆதித்யா இப்போது உயிருடன் இருந்தால், பேஸ்புக்கில் எப்படி தகவல்களை பரிமாறிக் கொள்வாரோ, அதேபோல அவரது சகோதரி ஸ்ருதி பரிமாறி வருகிறார். இது பற்றி ஸ்ருதி கூறுகையில், “ஒரு ஆண்டுக்கு முன்பு பைக் விபத்தில் அவன் இறந்ததை நம்பவே முடியவில்லை. அவன் இன்னும் உயிருடன் இருப்பதாகவே கருதி, பேஸ்புக் புரொஃபைலை தொடர்ந்து புதுப்பித்து வருகிறேன்” என்றார்.
மாலினி சர்மாவும் (28) இப்படித்தான். “பவனும் நானும் 9 ஆண்டாக காதலித்தோம். 2 ஆண்டு முன்பு திருமணம் செய்தோம். கடந்த ஆண்டு நடந்த கார் விபத்தில் நான் படுகாயத்துடன் தப்பிக்க, பவன் இறந்துவிட்டார். அவரது பேஸ்புக் கணக்கை தொடர்ந்து புதுப்பிக்கிறேன். இன்னமும் அவருக்கு தீபாவளி, பர்த்டே வாழ்த்துகள் அனுப்புகிறேன். அவருடன் எடுத்துக்கொண்ட பழைய போட்டோக்களை நண்பர்கள் அனுப்புகிறார்கள். பவன் உயிருடன் இருப்பதாகவே உணர்கிறேன்” என்கிறார்.
ரம்யாவும் இதே ரகம். சக மாணவன் குஞ்சன் ஷாவும் ரம்யாவும் நெருங்கிய நண்பர்கள். புனேவுக்கு கல்லூரி டூர் போயிருந்தபோது, கார் மோதி குஞ்சன் இறந்துவிட்டார். அவரது பேஸ்புக் கணக்கை ரம்யா தற்போது தொடர்ந்து வருகிறார். “ஒருவர் மீதான காதலும் அன்பும் சாவுக்கு பிறகு அழிந்துவிட கூடாது என்று குஞ்சன் அடிக்கடி சொல்வான். பேஸ்புக் அக்கவுன்ட் மூலம் அவன் இன்னமும் என்கூடவே இருக்கிறான்” என்கிறார் ரம்யா.
இப்படி ஓரிருவர் அல்ல.. இன்னும் எத்தனையோ பேர் தங்கள் கணவன், மனைவி, சகோதர, சகோதரி, நண்பனை மறக்க முடியாமல் அவர்களது இறப்புக்கு பிறகும் பேஸ்புக், டுவிட்டர், லிங்க்ட்இன், கூகுள்பிளஸ், மைஸ்பேஸ் உள்ளிட்ட சமூக இணையதள கணக்குகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அவர்கள் இன்னமும் உயிருடன் இருப்பதாக கருதி படங்கள், தகவல்களை பகிர்ந்து கொள்கின்றனர்.
நெகிழ்ச்சியான விஷயம் என்றாலும், இந்த கலாசாரம் ஆரோக்கியமானதா? இல்லவே இல்லை என்று மறுக்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
நெருங்கிய ஒருவரின் மறைவு துக்கமானதுதான். ஆனாலும், அந்த சோகத்தில் இருந்து 3 முதல் 6 மாதத்துக்குள் விடுபட வேண்டும். 6 மாதத்துக்கு பிறகும் அந்த சோகம் நீடிப்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இறந்த ஒருவர் இருப்பதாக கருதி சமூக இணையதளங்களில் தகவல்களை பரிமாறுவதும் நாளடைவில் மன பாதிப்பை ஏற்படுத்தும். இது மிகமிக அபாயகரமானது என்கின்றனர் டாக்டர்கள்.
No comments:
Post a Comment