Wednesday 22 February 2012

மானேஜ்மென்ட் கோட்டா மாணவர்களுக்கு வங்கி கடன் இல்லை

தொழிற்கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில்(மானேஜ்மென்ட் கோட்டா) சேரும் மாணவர்களுக்கு கடன் கொடுக்கக் கூடாது என்று வங்கிகளுக்கு இந்திய வங்கிகள் சங்கம் உத்தரவிட்டுள்ளது.
பொறியியல், மருத்துவம் மற்றும் நிர்வாகவியல் போன்ற தொழில் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் கல்விக் கடன் வழங்க வேண்டும் என்று வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கல்விக் கடன் வழங்கி வந்தன. இந்த கடனை அவர்கள் கோர்ஸ் முடிந்து ஓராண்டுக்கு பிறகு செலுத்த வேண்டும்.
இந்நிலையில், கல்வி கடன் பெற்ற மாணவர்கள் படிப்பு முடிந்து ஓராண்டு கழிந்த பின்பும் தவணை செலுத்துவதில்லை என புகார்கள் வந்தன. வராத கடன் தொகை ரூ 1000 கோடியை எட்டி விட்டதாக வங்கிகள் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, அனைத்து வங்கிகளுக்கும் இந்திய வங்கிகள் சங்கம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கல்வி கடன் திட்டத்தில், வரா கடன் தொகை அதிகரித்து வருவதால், வங்கிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, பொறியியல், நிர்வாகவியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் அந்த கல்வி கட்டணத்தை செலுத்த வசதியற்றவர்களாக உள்ளனர். எனினும், அவர்கள் வங்கிக் கடன் வாங்கி சேர்ந்து விட்டு, பின்னாளில் கடனை திருப்பி செலுத்துவதில்லை.
கல்விக் கடன் திட்டம் என்பது மெரிட் அடிப்படையில் சேரும் மாணவர்களுக்காக கொண்டு வரப்பட்டதுதான். எனவே, நிர்வாக ஒதுக்கீடு மாணவர்களுக்கு வங்கிகள் கடன் தர வேண்டியதில்லை. அப்படியே தருவதென்றாலும், அவர்களின் திருப்பிச் செலுத்தும் தகுதியை உறுதி செய்த பின்பு தரலாம். அதாவது, சொத்து உத்தரவாதத்தில் தரலாம். உள்நாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சம் ரூ 10 லட்சமும், வெளி நாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சம் ரூ 20 லட்சமும் கடன் தரலாம். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு பெற்றோர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல தொழில் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் வங்கிக் கடனை திருப்பி செலுத்தாத நிலையில், மாணவர்களுக்கு மட்டும் அநீதி இழைப்பதா என்று அவர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.

No comments:

Post a Comment